தாம்பரத்தில் வேகமாக பரவும் டெங்கு - சுகாதாரத்துறை அதிகாரிகள் வீடு வீடாக சோதனை
தாம்பரத்தில் வேகமாக பரவும் டெங்குவை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.;
தாம்பரம்,
தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களில் டெங்குவால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. தற்போது, குரோம்பேட்டை மருத்துவமனையில் 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே, மாநகராட்சி ஆணையர் அழகு மீனா தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இச்சோதனையில் அதிகாரிகளுடன் இணைந்து 593 டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்களும் வீடுகளில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கான ஆய்வில் ஈடுபட்டனர்.
மேலும் தொடர் காய்ச்சல் இருப்பவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனையின் போது வீடுகளில் 3 நாட்களுக்கு மேல் தண்ணீர் தேங்கவிடாமலும், 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருப்பவர்கள் ஆரம்ப சுகாதார மையத்தை அணுகவேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் அதிகாரிகள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.