பாலியல் பலாத்கார வழக்கு: கோர்ட்டு உத்தரவிட்டும் இழப்பீடு வழங்காதது ஏன்?- தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
பாலியல் பலாத்கார வழக்கில் கோர்ட்டு உத்தரவிட்டும் இழப்பீடு வழங்காதது ஏன்? என்று தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது.;
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண், மதுரை ஐகோர்ட்டு நிர்வாக நீதிபதிக்கு கடந்த 2019-ம் ஆண்டு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அதில், கணவரை இழந்து மகன் மற்றும் மகளுடன் வசித்து வருகிறேன். எனது மகள் திருப்புவனம் பகுதியில் உள்ள கார்த்திக் என்பவரது ஜவுளிக்கடையில் 3 வருடங்களாக பணியாற்றி வந்தார். இதற்கிடையே, அவரது நண்பர் சின்னப்பா நவம்பர் மாதம் 7-ந் தேதி தீபாவளி விருந்து என்று கூறி எனது மகளை வலுக்கட்டாயமாக அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து கும்பகோணம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து சின்னப்பாவை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் ஜவுளிக்கடை உரிமையாளர் கார்த்திக் உள்பட சிலருக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த கடிதத்தின் அடிப்படையில் ஐகோர்ட்டு தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. விசாரணை முடிவில், வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றியும், இழப்பீடாக கூடுதலாக ரூ.3 லட்சம் வழங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர். ஆனால், கோர்ட்டு உத்தரவுப்படி இதுவரை ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கப்படவில்லை என்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியம் மற்றும் லட்சுமி நாராயணன் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், கோர்ட்டு உத்தரவிட்டும் அதை ஏன் நிறைவேற்றவில்லை? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், 2 வாரங்களுக்குள் அரசுத்தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டனர்.