ராமேசுவரம் கோவில் ஊழியர் திடீர் தற்கொலை

ராமேசுவரம் கோவில் ஊழியர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்கு அதிகாரிகள் காரணம் என புகார் தெரிவித்து குடும்பத்தினரும், சக பணியாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2023-08-19 18:45 GMT

ராமேசுவரம் கோவில் ஊழியர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்கு அதிகாரிகள் காரணம் என புகார் தெரிவித்து குடும்பத்தினரும், சக பணியாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவில் ஊழியர்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப்ப நாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் நவீன் சந்துரு (வயது 36). இவர் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் கண்காணிப்பு பணியாளராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி லாவண்யா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

அவருடைய குடும்பத்தினர் ஊரில் உள்ள நிலையில், நவீன் சந்துரு ராமேசுவரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக தங்கி இருந்து வந்துள்ளார்.

தூக்குப்போட்டு தற்கொலை

நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கோவிலில் பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்ற இவர், திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அவரது உடலை பரிசோதனைக்காக ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே பணிச்சுமை காரணமாக நவீன் சந்துரு தற்கொலை செய்து கொண்டார் என்றும், அவரது சாவுக்கு அதிகாரிகள்தான் காரணம் என்றும், அவர்க்ள மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நவீன் சந்துருவின் மனைவி லாவண்யா மற்றும் பெற்றோர் புகார் கூறினர்.

அவர்களும், நவீன் சந்துருவின் சக பணியாளர்கள் ராமேசுவரம் கோவிலின் கிழக்கு வாசல் முன்பு அமர்ந்து திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இது குறித்து தகவல் அறிந்ததும் ராமேசுவரம் தாசில்தார் அப்துல் ஜபார், துணை சூப்பிரண்டு உமாதேவி மற்றும் கோவில் இணை ஆணையர் சிவராமகுமார் தலைமையிலான அதிகாரிகள், அவர்களை அழைத்து கோவில் அலுவலக வளாகத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இணை ஆணையர் சிவராமகுமார் கூறுகையில், இது குறித்து போலீசாரின் விசாரணைக்கு பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும். தற்கொலை செய்த கோவில் பணியாளரின் மனைவிக்கு கோவிலில் அரசு வேலை கிடைக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு பரிந்துரை செய்து அதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

இதை தொடர்ந்து போராட்டம் நடத்திய சக பணியாளர்களும் மற்றும் நவீன் சந்துரு குடும்பத்தினரும் கலைந்து சென்றனர்.

போலீஸ் விசாரணை

தற்கொலை செய்து கொண்ட நவீன் சந்துரு, கோவிலில் வேலைக்கு சேர்ந்து 7 மாதமே ஆகிறது. இந்த நிலையில் அவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டது சக பணியாளர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்