ராமேசுவரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்

இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுதலை செய்ய வலியுறுத்தி இன்று முதல் ராமேசுவரத்தில் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்துகிறார்கள்.

Update: 2022-09-09 16:48 GMT

ராமேசுவரம்,

இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுதலை செய்ய வலியுறுத்தி இன்று முதல் ராமேசுவரத்தில் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்துகிறார்கள்.

ஆலோசனை கூட்டம்

ராமேசுவரத்தில் நேற்று அனைத்து விசைப்படகு மீனவர் சங்க அவசர ஆலோசனை கூட்டம் மீனவர் சங்கத்தலைவர் சகாயம் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இலங்கை கடற்படையால் கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை சிறைபிடிக்கப்பட்டுள்ள இலங்கை வசம் உள்ள 80-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளையும் நாட்டு படகுகளையும் மற்றும் மீனவர்களையும் உடனடியாக மத்திய, மாநில அரசுகள் மீட்டு கொண்டு வர வேண்டும்.

கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து 2018-ம் ஆண்டு வரை இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டும் பராமரிப்பின்றி சேதம் அடைந்து மூழ்கி போன தமிழகத்தைச் சேர்ந்த 125 படகுகளுக்கும் அரசு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கியதில் ராமேசுவரத்தைச் சேர்ந்த 7 விசைப்படகுகள் விடுபட்டு விட்டன. இந்த படகுகளுக்கும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும். கடுமையான டீசல் விலை உயர்வினால் விசைப்படகுகளை இயக்கவே முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. அரசால் மாதம்தோறும் விசைப்படகு ஒன்றுக்கு 1500 லிட்டர் மானிய டீசல் வழங்கப்பட்டு வருகின்றது. இதை 3 ஆயிரம் லிட்டராக அரசு உயர்த்தி வழங்க வேண்டும்.

காலவரையற்ற வேலை நிறுத்தம்

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று(சனிக்கிழமை) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்றும், மேலும் வருகின்ற 13-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று தங்கச்சிமடம் வலசை பஸ் நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் சேசு ராஜா, எமரிட், தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்