ராமநாதபுரம் பெரிய கண்மாயில் கோடையிலும் தண்ணீர் இருப்பு
ராமநாதபுரம் பெரிய கண்மாயில் கோடை வெயிலையும் தாண்டி தற்போது வரை ஒரு அடிக்கும் அதிகமான தண்ணீர் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் பெரிய கண்மாயில் கோடை வெயிலையும் தாண்டி தற்போது வரை ஒரு அடிக்கும் அதிகமான தண்ணீர் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பருவமழை பொய்த்தது
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை குறைவாக பெய்தது. பெய்த கனமழையும் பயனின்றி கடல்பகுதியில்தான் பெய்தது. இதனால் வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்யும் என எதிர்பார்த்து சுமார் ஒரு லட்சத்து 35 ஆயிரம் எக்டரில் நெல் விவசாயம் செய்த விவசாயிகள் மழையில்லாமல் போனதால் ஏமாற்றமடைந்தனர்.
இதனால் பல பகுதிகளில் பயிர் கருகி விட்டதால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. நெல் கைவிட்டதால் அதனை நம்பி பயனில்லை என்று பல பகுதிகளில் விவசாயிகள் நெற்பயிர்களை அறுத்துவிட்டு மீண்டும் உழுது பருத்தி, மிளகாய் உள்ளிட்டவைகளை பயிரிட்டனர். இதற்கு மாறாக வைகை தண்ணீர் பாயும் பகுதிகளில் நல்ல விளைச்சல் ஏற்பட்டது. பருவமழைக்கு முன்னதாகவே வைகை தண்ணீர் வந்ததால் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பியது. இதனால் வைகை பாசன பகுதிகளில் முதல்போக சாகுபடி முழுமையடைந்தது.
2-ம் போக சாகுபடி
இதனை தொடர்ந்து விவசாயிகள் 2-ம் போக சாகுபடி மேற்கொண்டனர். நெல்லை விட அதிகளவில் காய்கறிகளை பயிரிட்டனர். குறிப்பாக குறைந்த செலவில் அதிக லாபம் தரும் மின்னி பயிர்களை பயிரிட்டனர். இந்த மின்னி பயிர்களின் இலை கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுவதால் பருவமழை பொய்த்தால் வைக்கோல் பற்றாக்குறையால் உணவு கிடைக்காமல் தவித்த கால்நடைகளுக்கு தீவனம் கிடைத்தது.
இதுதவிர விவசாயிகள் பெரிய கண்மாய் தண்ணீரை பயன்படுத்தி வெள்ளரி, கத்தரி, வெண்டை, பாகற்காய் போன்ற காய்கறிகளை அதிகளவில் சாகுபடி செய்து நல்ல லாபம் சம்பாதித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் கத்தரி வெயில் முடிந்த பின்னரும் சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வெளியில் செல்ல முடியாத வகையில் வெயில் அடிக்கிறது.
விவசாயிகள் மகிழ்ச்சி
இந்த சூழ்நிலையிலும் ராமநாதபுரம் பெரிய கண்மாயில் தற்போது ஒரு அடிக்கும் அதிகமான தண்ணீர் உள்ளது. இந்த தண்ணீரை பயன்படுத்தி விவசாயிகள் காய்கறிகளை தொடர்ந்து பயிரிட்டு வருகின்றனர்.
குறிப்பாக தற்போது அதிக லாபம் தரும் தக்காளியை பயிரிட்டு சாகுபடி செய்து வருகின்றனர். பல ஆண்டுகளுக்கு பின்னர் கடும் கோடைக்கு பின்னரும் பெரிய கண்மாயில் வைகை தண்ணீர் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.