ராமநாதபுரம் பெரிய கண்மாயில் 3 அடி தண்ணீர் இருப்பு

ராமநாதபுரம் பெரிய கண்மாயில் கோடை வெயிலை தாண்டியும் தற்போது வரை 3 அடி தண்ணீர் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து காய்கறிகளை பயிரிட்டுள்ளனர்.

Update: 2023-06-23 18:45 GMT

ராமநாதபுரம் பெரிய கண்மாயில் கோடை வெயிலை தாண்டியும் தற்போது வரை 3 அடி தண்ணீர் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து காய்கறிகளை பயிரிட்டுள்ளனர்.

மழை அளவு குறைவு

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கியதோடு இயல்பான மழை அளவினை விட குறைவாகவே பெய்தது. பெய்த கனமழையும் பயனின்றி கடல்பகுதியில்தான் பெய்தது. இதனால் வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்யும் என எதிர்பார்த்து சுமார் ஒரு லட்சத்து 35 ஆயிரம் எக்டரில் நெல் விவசாயம் செய்த விவசாயிகள் மழையில்லாமல் போனதால் கடும் ஏமாற்றமடைந்தனர். இதனால் பல பகுதிகளில் பயிர்கள் கருகி விட்டன.

நெல்மணிகள் வரும் முன்னரே பயிர்கள் கருகியதால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. நெல் கைவிட்டதால் அதனை நம்பி பயனில்லை என்று பல பகுதிகளில் விவசாயிகள் நெற்பயிர்களை அறுத்துவிட்டு மீண்டும் உழுது பருத்தி, மிளகாய் உள்ளிட்டவைகளை பயிரிட்டுள்ளனர். மாவட்டத்தில் வைகை தண்ணீர் பாயாத பகுதிகளில்தான் இந்த நிலை உள்ளது. ஆனால், வைகை தண்ணீர் பாயும் பகுதிகளில் நல்ல விளைச்சல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் பருவமழைக்கு முன்னதாகவே வைகை தண்ணீரால் நீர் நிலைகளை நிரப்பியதாலும், வைகை உபரிநீர் வந்ததாலும், மழை ஓரளவு பெய்ததாலும் நீர்நிலைகள் நிரம்பி விவசாயத்திற்கு கைகொடுத்துள்ளது

2-ம் போக சாகுபடி

வைகை அணையில் இருந்து வந்த தண்ணீரை மாவட்ட நிர்வாகம் முறையாக அனைத்து கண்மாய்களுக்கும் பாரபட்சமின்றி பகிர்ந்து அளிக்க நடவடிக்கை எடுத்தது. இதன் காரணமாக வைகை தண்ணீர் பல ஆண்டுகளாக செல்லாத பகுதிகளில் கூட கொண்டு சேர்க்கப்பட்டது. இதனால் பெரும்பாலான நீர்நிலைகளில் வைகை தண்ணீர் நிறைந்து முதல்போக சாகுபடி முழுமை அடைந்தது.

இந்நிலையில் முதல்போக அறுவடை முடிந்த பின்னர் விவசாயிகள் தங்கள் நிலங்களில் உழுது மீண்டும் விதைத்து 2-ம் போக சாகுபடியை மேற்கொண்டனர். தங்கள் பகுதி நீர்நிலைகளில் தண்ணீர் இருப்பு இருந்தபோதிலும் பல விவசாயிகள் என்ன காரணத்தினாலோ 2-ம் போக சாகுபடியை மேற்கொள்ள தயங்கினர்.

காய்கறி சாகுபடி

இந்நிலையில் ராமநாதபுரம் பெரிய கண்மாயை சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 2-ம் போக சாகுபடிக்கு அதிக ஆர்வம் காட்டாமல் மாறாக காய்கறிகளை பயிரிட்டுள்ளனர். வெள்ளரி, கத்தரி, வெண்டை, பாகற்காய் போன்ற காய்கறிகளை அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.

ராமநாதபுரம் பெரிய கண்மாயில் தற்போது 3 அடி தண்ணீர் உள்ளதால் காய்கறி சாகுபடியை அடுத்த நெல் விவசாய பருவம் வரை மேற்கொள்ள விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். பெரிய கண்மாயை நம்பி உள்ள விவசாயிகள் இந்த ஆண்டு நெல் விவசாயம் கைகொடுத்ததோடு பருத்தி, மிளகாய் மட்டுமல்லாமல் பாகற்காய், வெண்டை, கத்தரி போன்ற காய்கறிகளும் கைகொடுத்து வருவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்