பள்ளிவாசல்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை
திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிவாசல்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் திரளான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.;
முஸ்லிம்கள் ரமலான் மாதத்தை புனித மாதமாக கருதுகின்றனர். எனவே ரமலான் மாதம் முழுவதும் முஸ்லிம்கள் நோன்பு மேற்கொள்கின்றனர். பின்னர் நோன்பை நிறைவு செய்து ரம்ஜான் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடுகின்றனர். அதன்படி ரமலான் மாத நோன்பு நிறைவு பெற்று நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி தமிழகம் முழுவதும் பள்ளிவாசல்களில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. இதில் முஸ்லிம்கள் பங்கேற்று தொழுகை மேற்கொண்டனர். இதில் திண்டுக்கல் பேகம்பூர் பெரிய பள்ளிவாசலில் நேற்று காலை ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதற்காக பள்ளிவாசலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இந்த தொழுகையில் திண்டுக்கல் நகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த முஸ்லிம்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
சிறப்பு தொழுகை
இதேபோல் திண்டுக்கல் நாகல்நகர் பள்ளிவாசல், முகதியாபுரம், ரவுண்டுரோடு உள்பட நகரில் அனைத்து பள்ளிவாசல்களிலும் ரம்ஜான் தொழுகை நடைபெற்றது. இதுதவிர வத்தலக்குண்டு, கொடைக்கானல் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் நேற்று ரம்ஜான் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.
மேலும் தொழுகை முடிந்ததும் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர். அதேபோல் வெளியூர்களில் இருக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு செல்போன் மூலம் ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
வேடசந்தூர்
வேடசந்தூரில் ரம்ஜான் பண்டிகையையொட்டி கடைவீதி பெரிய பள்ளிவாசலில் முஸ்லிம்கள் திரண்டனர். பின்னர் தலைமை இமாம் முகமது இப்ராகிம் தலைமையில், ஜமாத் தலைவர் காசிம் ஹாஜியார், செயலாளர் உமர்அலி மற்றும் ஜமாத்தார்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பள்ளிவாசலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு ஆத்துமேட்டில் உள்ள ஈத்கா மைதானத்துக்கு வந்தனர். பின்னர் அங்கு நடந்த ரம்ஜான் சிறப்பு தொழுகையில் பங்கேற்றனர்.
இடையக்கோட்டை
இதேபோல் ஒட்டன்சத்திரம் தாலுகா இடையக்கோட்டை முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் முஸ்லிம்கள் திரண்டனர். பின்னர் அங்கிருந்து பள்ளிவாசல் தலைவர் சையது மீரான் தலைமையில் ஈத்கா மைதானத்துக்கு ஊர்வலமாக சென்றனர். பின்னர் அங்கு சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.
தொழுகை முடிந்ததும் அன்பின் வெளிப்பாடாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒருவரையொருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். மேலும் சக்கரபாவா பள்ளிவாசலிலும் நேற்று ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது. பாதுகாப்பு பணியில் இடையக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி தலைமையிலான போலீசார் ஈடுபட்டனர்.
நத்தம், சாணார்பட்டி
நத்தம் கோவில்பட்டி கோரிமேடு ஈத்கா மைதானத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி நேற்று சிறப்பு தொழுகை நடந்தது. உலக நன்மைக்காகவும், மழை பெய்ய வேண்டியும் நடந்த இந்த சிறப்பு தொழுகையில் முஸ்லிம்கள் திரளாக பங்கேற்றனர். தொழுகை முடிந்ததும் ஒருவரையொருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். மேலும் வத்திபட்டி, பரளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள பள்ளிவாசல்களிலும் ரம்ஜான் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.
சாணார்பட்டி அருகே ராஜக்காபட்டி, மருநூத்து, வேம்பார்பட்டி, கணவாய்பட்டி, பாரைபட்டி, மந்தநாயக்கன்பட்டி, மேட்டுப்பட்டி, சாணார்பட்டி ஆகிய இடங்களில் உள்ள பள்ளிவாசல்களில் ரம்ஜான் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். மேலும் புத்தாடைகள் அணிந்து ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர்.
பழனி
பழனி பெரியபள்ளிவாசல் மற்றும் சின்ன பள்ளிவாசலில் ரம்ஜானையொட்டி சிறப்பு தொழுகை நடந்தது. இதில் திரளான முஸ்லிம்கள் கலந்துகொண்டு தொழுகை மேற்கொண்டனர். மேலும் அங்கு வந்த ஏழைகளுக்கு பொருட்கள், பணம் முதலானவற்றை தானமாக வழங்கினர்.
அதேபோல் தங்கள் நண்பர்கள், பக்கத்து வீட்டாருக்கு பிரியாணி கொடுத்து மகிழ்ந்தனர். இதேபோல் நெய்க்காரப்பட்டி, ஆயக்குடி, கீரனூர், பாப்பம்பட்டி என அனைத்து பகுதிகளிலும் உள்ள பள்ளிவாசல்களில் ரம்ஜானையொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது.