கிருஷ்ணகிரியில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை பவனி

Update: 2023-04-02 18:45 GMT

கிருஷ்ணகிரி:

குருத்தோலை ஞாயிறையொட்டி கிருஷ்ணகிரியில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. முன்னதாக நடந்த பவனியில் குருத்தோலைகளை ஏந்தியபடி திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

குருத்தோலை ஞாயிறு

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு 40 நாட்கள் உபவாசம் மேற்கொண்டதாக கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் கழுதை குட்டியின் மீது அமர்ந்தபடி, ஜெருசலேம் நகருக்கு வந்தார். அப்போது அங்கிருந்த மக்கள் 'தாவீதின் மைந்தனுக்கு ஓசன்னா' என்று முழங்கியபடி அவரை வரவேற்றனர்.

மேலும் துணிகளை தரையில் விரித்தும், ஒலிவ மரக்கிளைகள், குருத்தோலைகளை கையில் ஏந்தியபடியும் அவருக்கு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறாக அனுசரிக்கப்படுகிறது.

பவனி

குருத்தோலை ஞாயிறையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்படும். அதற்கு முன்பாக குருத்தோலை பவனியும் நடைபெறும். இந்த ஆண்டு வருகிற 9-ந் தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு நேற்று குருத்தோலை ஞாயிறு அனுசரிக்கப்பட்டது. குருத்தோலை ஞாயிறையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

அதன்படி நேற்று கிருஷ்ணகிரி பழையபேட்டையில் உள்ள புனித இஞ்னாசியார் ஆலயத்தில் இருந்து குருத்தோலை பவனி தொடங்கி, காந்தி சிலை, தர்மராஜா கோவில் தெரு வழியாக புனித பாத்திமா அன்னை திருத்தலத்தை வந்தடைந்தது.

சிறப்பு திருப்பலி

இந்த குருத்தோலை பவனியில், ஏராளமான கிறிஸ்தவ மக்கள் கைகளில் குருத்தோலைகளை ஏந்தியவாறு, உன்னதங்களில் ஓசன்னா என்ற பாடலை பாடியபடி பவனி வந்தனர். பின்னர் தர்மபுரி மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

இதேபோல் ஓசூர், பர்கூர், ஊத்தங்கரை, கந்திகுப்பம், எலத்தகிரி என மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் குருத்தோலை பவனி மற்றும் திருப்பலிகள் நடைபெற்றன.

மேலும் செய்திகள்