தமிழ் ஆட்சி மொழி சட்டம் நிறைவேற்றப்பட்ட நாளை நினைவு கூறும் வகையில் தர்மபுரி மாவட்டத்தில் ஆட்சி மொழி சட்ட வார விழா கொண்டாடப்படுகிறது. வருகிற 16-ந் தேதி வரை நடக்கும் இந்த விழாவையொட்டி ஆட்சி மொழி சட்டம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பட்டிமன்றம் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆட்சி மொழி சட்டவார விழிப்புணர்வு ஊர்வலம் தர்மபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து தொடங்கி நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் (பொறுப்பு) ஜெயஜோதி மற்றும் அரசு அலுவலர்கள், தமிழ் ஆர்வலர்கள், ஆசிரியர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.