கருணாநிதி நினைவிடத்தில் அருங்காட்சியகத்தை பார்வையிட்ட ராஜ்நாத் சிங்

கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா தமிழக அரசு சார்பில் இன்று நடைபெறுகிறது.

Update: 2024-08-18 13:16 GMT

சென்னை,

மறைந்த தி மு க தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, 100 ரூபாய் நினைவு நாணயம் வெளியிட தமிழக அரசு மத்திய அரசிடம் அனுமதி கோரியிருந்தது. அதற்கு, மத்திய அரசும் அனுமதி வழங்கியது. இந்த நிலையில், கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழா தமிழக அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத்சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கருணாநிதி நூற்றாண்டை குறிக்கும் வகையில், 100 ரூபாய் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார்.

இந்நிலையில் கருணாநிதி நினைவிடத்தில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார். முன்னதாக கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்த மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கை, சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். பின்னர் இருவரும் கலைஞர், அண்ணா நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

இதனைத்தொடர்ந்து கருணாநிதி நினைவிடத்தில் உள்ள அருங்காட்சியகத்தை ராஜ்நாத் சிங் பார்வையிட்டார். அவருடன் மந்திரி எல். முருகன், தி.மு.க. எம்.பி.க்கள் டி.ஆர். பாலு, கனிமொழி, பா.ஜனதா தலைவர் அண்ணாமலை உடனிருந்தனர்.

கருணாநிதி நினைவிடத்திற்கு பா.ஜனதா மூத்த தலைவர்கள் வருகை தந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்