ராஜகோபாலசாமி கோவில் ஆடிப்பூர தேரோட்டம்
மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் ஆடிப்பூர தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.;
மன்னார்குடி:
மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் ஆடிப்பூர தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பிரம்மோற்சவம்
மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் செங்கமலத்தாயாருக்கு ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தெடாங்கி நடைபெற்று வந்தது.
விழாவையொட்டி தினமும் அன்னவாகனம், வெள்ளி சேஷவாகனம், யானை வாகனம், கமலவாகனம், குதிரை வாகனம் உள்பட பல்வேறு வாகனங்களில் செங்கமலத்தாயார் எழுந்தருளி கோவில் வெளிப்பிரகார உலா நடைபெற்று வந்தது.
ஆடிப்பூர தேரோட்டம்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடிப்பூர தேரோட்டம் நேற்று மதியம் நடைபெற்றது. முன்னதாக தேரில் சிறப்பு அலங்காரத்தில் செங்கமலத்தாயார் எழுந்தருளினார். இதை தொடர்ந்து தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
கோவில் அறங்காவலர் குழு தலைவர் இளவரசன் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். இதில் ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ, நகர்மன்ற துணைத்தலைவர் கைலாசம் தேசிய மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
போலீஸ் பாதுகாப்பு
தேர் கோவிலை சுற்றி வலம் வந்து மாலையில் நிைலயை அடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மாதவன் மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அஸ்வத் ஆண்டோ தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.