பாலாற்றில் வீணாக செல்லும் மழை நீர்: கால்வாய்களை தூர்வாரி ஏரிகளில் நீர் நிரப்பவேண்டும்; கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு
பாலாற்றில் வீணாக செல்லும் மழை நீர் கால்வாய்களை தூர்வாரி ஏரிகளில் நீர் நிரப்பவேண்டும் என கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை மனுவை அளித்தனர்.;
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் பாலாற்றுப்படுகை உள்ளது. வடகிழக்கு பருவ மழையின் காரணமாக பாலாற்றில் மழை வெள்ளம் பாய்கிறது. பாலாற்றின் கரையோர கிராமங்களாக உள்ள அவளூர், தம்மனூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள ஏரிகளுக்கு ஆண்டு தோறும் மழைக்காலங்களில் பாலாற்றில் ஓடும் வெள்ளம் நீர் வரத்து கால்வாய்கள் வழியாக கொண்டு சென்று ஏரிகளில் நிரப்பி 700 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுவது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு பெய்த மழையின் காரணமாக பாலாற்றில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டு ஏரிகளுக்கு செல்லும் கால்வாய்கள் அனைத்தும் தூர்ந்து போய் உள்ளது. அதன் காரணமாக தற்போது பாலாற்றில் வெள்ளம் சென்றாலும் அவளூர், தம்மனூர் ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் காஞ்சீபுரம் மாவட்ட நிர்வாகம் கிராமப்புற விவசாயிகள் பயன்பெறும் வகையில் பாலாற்றில் வீணாக செல்லும் மழை நீரை ஏரிகளுக்கு கொண்டு செல்ல நீர் வரத்து கால்வாய்களை தூர்வாரி ஏரிகளில் நீர் நிரப்ப உதவிட வேண்டும் என அவளூர், தம்மனூர் கிராமப்புற விவசாயிகள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஆர்த்தியை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.