விழுப்புரம் வந்த பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயிலின் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிக்குள் ஒழுகிய மழைநீர் பயணிகள் அதிருப்தி

விழுப்புரம் வந்த பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயிலின் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிக்குள் மழைநீர் ஒழுகியதால் பயணிகள் அதிருப்தியடைந்தனர்.

Update: 2023-08-31 18:45 GMT

பல்லவன் எக்ஸ்பிரஸ்

சென்னையில் இருந்து காரைக்குடிக்கு தினமும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று வருகிறது. இந்த ரெயில் மாலை 6 மணிக்கு விழுப்புரம் ரெயில் நிலையத்துக்கு வருவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று மாலை வழக்கம்போல் சென்னையில் இருந்து காரைக்குடிக்கு பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயில் மேல்மருவத்தூரை கடந்து வரும்போது அப்பகுதியிலும் மற்றும் திண்டிவனம் பகுதியிலும் பலத்த மழை பெய்தது.

மழைநீர் ஒழுகியது

அப்போது அந்த ரெயிலின் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளான சி2, சி3 பெட்டிகளில் மழைநீர் ஒழுகியது. இதனால் பயணிகளின் சில இருக்கைகளும் மழைநீரில் நனைந்ததால் பயணிகள் அந்த இருக்கைகளில் அமர முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் ரெயில் பெட்டிக்குள் தண்ணீர் தேங்கி நின்றதால் வேறு வழியின்றி அதில் நின்றவாறே பயணிகள் பயணம் செய்தனர்.

அதிக கட்டணம் செலுத்தி குளிர்சாதன வசதி கொண்ட ரெயில் பெட்டிகளில் பயணம் செய்த நிலையில் மழைநீர், ரெயில் பெட்டிக்குள் ஒழுகியதால் பயணிகள் மிகவும் அதிருப்தியடைந்ததோடு ரெயில் பெட்டிகளை முறையாக பராமரிக்காத ரெயில்வே நிர்வாகம் மீது கடுமையாக குற்றம்சாட்டினர்.

மாற்று ஏற்பாடு

பின்னர் இதுபற்றி அந்த பயணிகள், ரெயில்வே டிக்கெட் பரிசோதகரிடம் புகார் தெரிவித்தனர். உடனே அவர், அந்த பயணிகளுக்கு மாற்று ஏற்பாடாக அருகில் உள்ள ரெயில் பெட்டிகளில் பயணிக்க ஏற்பாடு செய்தார்.

மேலும் இதுபற்றி விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதனிடையே பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில், மாலை 6 மணிக்கு விழுப்புரம் வந்ததும் ரெயில்வே நிலைய தூய்மைப்பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு அப்பெட்டிகளில் தேங்கி நின்ற தண்ணீரை வெளியேற்றி சுத்தம் செய்தனர். அதன் பிறகு அந்த ரெயில் விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றது.

Tags:    

மேலும் செய்திகள்