ராமேசுவரம் கோவிலுக்குள் மழைநீர் புகுந்தது
ராமேசுவரத்தில் 2 மணி நேரம் பெய்த பலத்த மழையால் ராமநாதசுவாமி கோவிலுக்குள் தண்ணீர் புகுந்து 3-ம் பிரகாரத்தில் தேங்கியது.;
ராமேசுவரம்,
பலத்த மழை
தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் சில பகுதிகளில் நேற்று காலை மழை பெய்தது. குறிப்பாக ராமேசுவரத்தில் பலத்த மழையாக ெகாட்டியது.
காலை 10 மணி அளவில் தொடங்கி, சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் தண்ணீர் குளம்போல் தேங்கி நின்றது.
கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது
மழையால் ராமேசுவரம் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது. அதாவது, கோவிலின் மேல்தளத்தில் இருந்து விழுந்த தண்ணீர், 3-ம் பிரகாரத்தில் சுவர்களில் விழுந்து நேராக அந்த பிரகார பாதையில் வந்து ேதங்கியது. மழைநீரில் நடந்து பக்தர்கள் 3-ம் பிரகாரத்தை வலம் வந்தனர்.
இதேபோல் கோவிலின் கிழக்கு ரதவீதி, தெற்கு ரதவீதியிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் அந்த வழியாக கோவிலுக்கு வந்த பக்தர்கள் சிரமம் அடைந்தனர். 3-ம் பிரகாரம் மற்றும் ரத வீதிகளில் தேங்கிய மழை நீரை வாருகால் வழியாக வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது.
மக்கள் மகிழ்ச்சி
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலின் உப கோவிலான லட்சுமணேசுவரர் கோவிலை சுற்றியும் மழைநீர் தேங்கி நின்றது. திட்டக்குடி சந்திப்பு சாலை, தனுஷ்கோடி சாலை, நகராட்சி அலுவலக பகுதி, பஸ் நிலைய பகுதி, ஆஞ்சநேயர் கோவில் எதிரே உள்ள சாலையிலும் மழைநீர் தேங்கியதால், அந்த வழியாக ெசன்ற வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்தபடி சென்றன.
சில மாதங்களாக மழையே பெய்யாமல் வெயில் வாட்டி வதைத்து வந்தநிலையில் நேற்று பெய்த இந்த பலத்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அடுத்துவரும் நாட்களிலும் இதேபோல் தொடர்ந்து மழை பெய்தால் மட்டுமே ராமேசுவரம் கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளிலும், வீடுகளில் உள்ள கிணறுகளிலும் நீர்மட்டம் உயரும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
--------------------