மழைநீர் வடிகால்வாய் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

மழைநீர் வடிகால்வாய் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.;

Update:2022-09-20 15:16 IST

சென்னை,

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

சென்னை ஆதம்பாக்கத்தில் தோண்டப்பட்டிருந்த மழைநீர் கால்வாய் பள்ளத்தில் தவறி விழுந்த வாசுதேவன் என்ற இளைஞரின் உடலில் இரும்புக் கம்பிகள் குத்திக் கிழித்திருக்கின்றன. உடலில் பல இடங்களில் படுகாயங்களுடன் அவர் மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகிறார்.

மழைநீர் கால்வாய் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் இரும்புக் கம்பிகள் பொருத்தப்பட்ட நிலையில், எந்த வித பாதுகாப்பு அரண்களும் இல்லாமல், அந்த பள்ளங்கள் பல நாட்களாக அப்படியே விடப்படுவது தான் இத்தகைய விபத்துகளுக்கு காரணம் ஆகும்.

சென்னையில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் மனிதர்கள் விழுவது இது இரண்டாவது முறை. இதற்கு முன் அடையாறு பகுதியில் ஒருவர் மகிழுந்துடன் மழைநீர் கால்வாயில் விழுந்து காயமடைந்தார். பாதுகாப்பு அரண்கள், இரவு நேரங்களில் எச்சரிக்கை விளக்குகள் அமைக்கப்படாவிட்டால் இத்தகைய விபத்துகள் தொடரும்.

மழைநீர் வடிகால் அமைப்பது தொடர்பான எந்த பணியும் நிர்ணயிக்கப்பட்ட கால அட்டவணைப்படி நடைபெறவில்லை. விரைவில் பருவமழை தொடங்கவுள்ள நிலையில், தோண்டப்பட்ட இடங்களில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்; இல்லாவிட்டால் மழைக்காலம் முடியும் வரை பள்ளங்களை மூட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 


Tags:    

மேலும் செய்திகள்