"சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 95% நிறைவு" - மேயர் பிரியா தகவல்
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் அக்டோபர் 10-ந்தேதிகுள் நிறைவடையும் என மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.;
சென்னை,
முன்னாள் மேயர் சிவராஜின் 131-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மின்ட் தங்கசாலையில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர் சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் துணை மேயர் மகேஷ்குமார் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய மேயர் பிரியா, சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்த தகவல்களை தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
"மழைநீர் வடிகால்களை பொறுத்தவரை கடந்த ஆண்டு சென்னையில் எந்த இடங்களில் வெள்ளம் அதிகமாக ஏற்பட்டு பாதிக்கப்பு ஏற்பட்டதோ, அந்த இடங்களை தேர்வு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
இந்த மழைநீர் வடிகால் பணிகளில் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. இன்னும் 5 சதவீத பணிகள் மட்டுமே இருக்கிறது. அதுவும் அக்டோபர் 10-ந்தேதிகுள் நிறைவடைந்துவிடும். மேலும் வெள்ள தடுப்பு பணிகளை கண்காணிக்க 15 மண்டலத்திற்கும் 17 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து இருக்கிறோம்.
மழை தேங்கி உள்ள பகுதிகளில் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும் அந்த பகுதியில் தடுப்பு வேலிகளும் அமைக்கப்படும். இது தொடர்பாக மின்சாரத்துறை மற்றும் மெட்ரோ துறைக்கும் அறிவுறுத்தி உள்ளோம்."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.