பெரியபாளையத்தில் ஆமை வேகத்தில் நடைபெறும் மழைநீர் வடிகால்வாய் பணி - விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
பெரியபாளையத்தில் ஆமை வேகத்தில் நடைபெறும் மழைநீர் வடிகால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் ஆரணி ஆற்றங்கரையின் மேற்கு பகுதியில் புகழ் பெற்ற பவானி அம்மன் கோவில் உள்ளது. இந்த ஊராட்சியில் சுமார் 12 ஆயிரம் பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள பவானி அம்மன் கோவிலில் ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் திருவிழா 14 வாரங்கள் தொடர்ந்து நடைபெறும்.
அவ்வாறு நடைபெறும் திருவிழா காலங்களில் ஏராளமான பக்தர்கள் சனிக்கிழமை இரவு வந்து தங்கி விட்டு ஞாயிற்றுக்கிழமை தங்களது நேர்த்தி கடனை செலுத்தி விட்டு செல்வாா்கள்.
இவ்வாறு பல ஆயிரம் பக்தர்கள் இந்த கோவிலுக்கு மாட்டு வண்டி, இரு சக்கர வாகனம், மூன்று சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருவர்.
பெரியபாளையம் பஜார் வீதியில் மழைக்காலங்களில் தண்ணீர் வெளியே செல்லாமல் சாலையிலேயே குளம் போல் தேங்கி நிற்கும். மேலும், கழிவு நீருடன், மழை நீரும் கலந்து துர்நாற்றம் வீசும். எனவே, சாலையின் இருபுறமும் மழை நீர் வடிகால்வாய் அமைத்து தரவேண்டும் என இந்த பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர்.
இந்த நிலையில், ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்ட நிதியின் மூலம் ரூ.3 கோடியே 75 லட்சம் மதிப்பில் பெரியபாளையம்-ஆரணி நெடுஞ்சாலையில் 10.50 மீட்டர் நீளத்துக்கு சாலையின் இரு புறமும் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணியை மேற்கொள்ள ஆங்காங்கே தோண்டப்பட்ட பள்ளங்கள் முறையாக மூடவில்லை என்றும், மழை நீர் வடிகால்வாய் அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடைபெறுகிறது என்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் மழை நீர் வடிகால்வாய் அமைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
மேலும், ஆங்காங்கே கம்பிகள் நீட்டிக் கொண்டு இருப்பதால் இ்ந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி அவதிப்படும் அவல நிலை நீடித்து வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைவாகவும், தரமாகவும் மழை நீர் வடி கால்வாய் பணியை
செய்து முடிக்க வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.