நெல்லையில் இடி-மின்னலுடன் மழை

நெல்லையில் இடி-மின்னலுடன் மழை பெய்தது.

Update: 2023-09-20 21:18 GMT

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் அடித்தது. நேற்று முன்தினம் நெல்லை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. நேற்று காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலை 3 மணிக்கு மேல் திடீரென வானில் கருமேகங்கள் திரண்டன. மாலை 5 மணிக்கு நெல்லை சந்திப்பு பகுதியில் இடி-மின்னலுடன் மழை பெய்தது.

இதேபோல் பாளையங்கோட்டை, கொக்கிரகுளம், நெல்லை டவுன், கே.டி.சி. நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பாளையங்கோட்டை குலவணிகர்புரம் ரெயில்வே கேட் அருகே மழைநீர் குளம் போல் தேங்கி கிடந்தது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

மேலும் மாநகரில் பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட குழிகளில் தண்ணீர் தேங்கியதால், சாலைகள் சேறும் சகதியுமாக மாறின. கொக்கிரகுளம் முத்தாரம்மன் கோவில் அருகே சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் மழைநீர் தேங்கி, சாலை குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கீழே விழுந்து காயம் அடைந்தனர். இதனால் சேதமடைந்த சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதேபோல் நாங்குநேரி, அம்பை, மணிமுத்தாறு, மாஞ்சோலை உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாலையில் மழை பெய்தது. இரவிலும் மழை தூறிக்கொண்டே இருந்தது. நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி நாங்குநேரி, பாபநாசம், மணிமுத்தாறு ஆகிய பகுதிகளில் தலா 2 மீல்லி மீட்டர், நெல்லையில் 5 மி.மீ, பாளையங்கோட்டையில் 7 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்