மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை
புதுக்கோட்டை மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.;
மழை
புதுக்கோட்டையில் நேற்று முன்தினம் மாலைக்கு மேல் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து இரவிலும் மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று பகலில் வெயில் அடித்தது. மாலை 6.30 மணிக்கு மேல் வானில் கருமேகங்கள் திரண்டு மழை பெய்ய தொடங்கின. இந்த மழை சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த காற்றுடன் பலமாக பெய்தது. இதனால் புதுக்கோட்டை நகரில் ஒரு சில இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்தன. மேலும் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து 2-வது நாளாக பெய்த மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல மாவட்டத்தில் ஆங்காங்கே மழை பெய்தது.
அரிமளம், அறந்தாங்கி
அரிமளம், கடையக்குடி, வன்னியம்பட்டி, ஓணாங்குடி, மிரட்டுநிலை, கே.புதுப்பட்டி, வாழறமாணிக்கம், கல்லூர், மேல்நிலைப்பட்டி, பெருங்குடி, நமணசமுத்திரம், ராயவரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காற்றுடன் பலத்த மழை பெய்தது.
அறந்தாங்கியில் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இந்த மழையால் குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.