விளைநிலங்களில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீர்

பி.முட்லூர் பகுதி விளைநிலங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் நடவு செய்ய முடியாமல் விவசாயிகள் பரிதவித்து வருகிறார்கள்.;

Update: 2022-11-06 20:50 GMT

புவனகிரி, 

நடவு பணி

புவனகிரி அருகே பி.முட்லூர், காட்டுவராயன்குறிச்சி, தீர்த்தாம்பாளையம், ஆனையாங்குப்பம் ஆகிய கிராமங்களில் விவசாயிகள் சம்பா சாகுபடி நடவு பணி செய்வதற்காக 500-க்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்களை ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து டிராக்டர்கள் மூலம் உழுது சீரமைத்தனர். மேலும் நாற்றங்கால் அமைத்து பராமரித்து வந்தனர்.

இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக புவனகிரி பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.

300 ஏக்கரில் மழைநீர்

இதனால் மேற்கண்ட கிராமங்களில் நடவு பணிக்காக தயார் செய்யப்பட்டிருந்த 300 ஏக்கர் விளை நிலங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதையடுத்து மழைநீரை வடியவைக்க விவசாயிகள் முயன்றனர். இருப்பினும் முடியவில்லை. இதனால் விவசாயிகள் சம்பா நடவு பணிகளை மேற்கொள்ள முடியாமல் பரிதவித்து வருகின்றனர். மேலும் நாற்றங்காலில் உள்ள நாற்றுகளும் அழுகி வீணாகி வருகிறது.

இதுகுறித்து பி.முட்லூரை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில்,

ஆண்டுதோறும் புவனகிரி பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் சம்பா சாகுபடி செய்து வந்தோம். தற்போது வடிகாலையொட்டி இருந்த விளைநிலங்களை சிலர் மனைப்பிரிவுகளாக மாற்றியுள்ளனர். இதனால் வயல்களில் தேங்கி நிற்கும் மழைநீரை வடிகால் வழியாக வெளியேற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.

இதன் காரணமாக கடந்த சில நாட்களாக வயல்களில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. பெரும் செலவு செய்து நாற்றங்கால் அமைத்து நெல்நாற்றுகளை பராமரித்து வந்தோம். மேலும் சிலரிடம் இருந்து நடுவதற்காக நாற்றுகளை வாங்கி வைத்து இருந்தோம்.

நஷ்டம்

தற்போது அவைகள் மழைநீரில் மூழ்கி வீணாகி வருவதால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. நாற்றுகள் நடுவதற்கு முன்பே நாங்கள் பல சிக்கல்களை சந்தித்து வருகிறோம். இதனால் சம்பா சாகுபடி பணியில் ஈடுபடவே பெரும் அச்சமாக உள்ளது. எனவே எங்களின் அச்சத்தை போக்கும்வகையில் விளை நிலங்களில் உள்ள மழைநீரை வடிய வைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்