கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்ததால் விவசாயிகள் கவலை

கோபி பகுதி கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.;

Update: 2023-04-04 21:03 GMT

ஈரோடு

கோபி பகுதி கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நெல் கொள்முதல் நிலையம்

பவானிசாகர் அணையில் இருந்து பிரிக்கப்படும் தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்கால் தண்ணீர் மூலம் கோபி பகுதியில் 24 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளார்கள்.

தற்போது 2-ம் போக நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம், செங்கலரை, மோதூர், பிள்ளையார் கோவில் துறை, வாணிபுத்தூர் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகின்றன.

மழையில் நனைந்தன

கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க குடோன் வசதி இல்லை. இதனால் ஏராளமான ெநல் மூட்டைகள் ரோட்டோரம் வெட்ட வெளியிலேயே அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் டி.என்.பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மழை பெய்தது. இதனால் புஞ்சைதுறையம்பாளையம், கொண்டையம்பாளையத்தில் உள்ள கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கோரிக்கை

கோபி பகுதியில் சில நாட்களாக இரவு நேரங்களில் திடீர் திடீரென கோடை மழை பெய்கிறது. நெல் மூட்டைகள் மழையில் நனைந்துவிட்டால் நெல்லின் தரம் பாதிக்கப்படும். எனவே நெல் கொள்முதல் நிலையங்களின் அருகிலேயே குடோன் வசதி ஏற்படுத்தி தரவேண்டும். இல்லை என்றால் கொள்முதல் செய்த உடனே மூட்டைகளை வாகனங்களில் ஏற்றி சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு செல்லவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்