காவிரி ஆற்றில் 2 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு: பவானி, கொடுமுடியில் 200-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது- பாதிக்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்கவைப்பு

காவிரி ஆற்றில் 2 லட்சம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் பவானி, கொடுமுடியில் 200-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

Update: 2022-10-17 21:23 GMT

பவானி

காவிரி ஆற்றில் 2 லட்சம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் பவானி, கொடுமுடியில் 200-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

கர்நாடகாவில் கனமழை

கர்நாடகாவில் கனமழை பெய்து வருகிறது. அதனால் அங்குள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட அணைகள் நிரம்பி விட்டதால் உபரி தண்ணீர் அப்படியே தமிழகத்துக்கு திறந்து விடப்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு வினாடிக்கு 45 ஆயிரம் கன அடி தண்ணீரே திறக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து அங்கு மழை பெய்ததால் நேற்று காலை வினாடிக்கு 2 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஏற்கனவே மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் அம்மாபேட்டை, நெரிஞ்சிப்பேட்டை, பவானி, ஈரோடு, ஊஞ்சலூர், கொடுமுடி உள்ளிட்ட பகுதிகளில் கரையோர வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

குளிக்க தடை

பவானியில் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள நேதாஜி நகர், காவிரி வீதி, காவேரி நகர், தினசரி மார்க்கெட் பகுதி, பசுவேஸ்வரர் வீதி, மற்றும் காவேரி பழைய பாலம் அருகே உள்ள பாலக்கரை ஆகிய தாழ்வான பகுதிகளில் இருக்கும் சுமார் 150-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. தண்ணீர் வரத்தை அறிந்ததும் நேற்று முன்தினம் இரவு பொதுமக்கள் தாங்களாகவே உடமைகளை எடுத்துக்கொண்டு பாதுகாப்பு முகாம்களுக்கு வந்துவிட்டார்கள்.

பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு பின்புறம் உள்ள கூடுதுறை பரிகார மண்டபத்தை வெள்ளம் சூழ்ந்தது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவில் நிர்வாகம் நேற்று முன்தினம் முதல் கடந்த 3 நாட்களாக பரிகார மண்டபத்தில் பரிகாரம் செய்யவும், ஆற்றில் இறங்கி குளிக்கவும் தடை விதித்து இருந்தது.

பரிகார மண்டபத்தில் தண்ணீர்

இந்தநிலையில் நேற்று காலை கூடுதுறை பரிகார மண்டபத்தில் தண்ணீர் புகுந்தது. 1 அடி ஆழத்துக்கு தண்ணீர் தேங்கி நின்றது. எனினும் பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்குள் தண்ணீர் புகவில்லை. வழக்கமாக பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

பவானி தினசரி மார்க்கெட் அருகே உள்ள மயானத்தை வெள்ளம் சூழ்ந்ததால் அங்கு பிணங்களை புதைக்கவும், எரிக்கவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் காவிரி ஆற்றங்கரை கிழக்கு பகுதியில் உள்ள மயானத்தின் சுற்றுச்சுவர் இடிந்ததால் மயானத்திற்குள் தண்ணீர் புகுந்து தேங்கியுள்ளது.

காவிரி ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பதால் பழமையான பவானி பழைய பாலத்தில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு 3-வது நாளாக பாலத்தின் வாயில் மூடப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் செல்வோர் சுமார் 7 கிலோமீட்டர் தூரம் சுற்றிச்செல்லும் நிலை உருவாகியுள்ளது.

கலெக்டர் பார்வையிட்டார்

இந்தநிலையில் பவானில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி சென்று பார்வையிட்டார். பவானி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து தேவையான வசதிகள் கிடைக்கிறதா? என்று கேட்டறிந்தார். அப்போது பவானி தாசில்தார் ரவிச்சந்திரன், ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் என் நல்லசிவம், பவானி நகராட்சி ஆணையாளர் தாமரை, பவானி நகராட்சி தலைவர் சிந்தூரி இளங்கோவன், பவானி நகர தி.மு.க. செயலாளர் ப.சீ.நாகராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்

மாற்று இடம்

வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட பின்னர் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறும்போது, 'வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 300-க்கும் மேற்பட்டோர் தற்போது கந்தன் பட்டறை, அரிசி மார்க்கெட் அருகே உள்ள நகராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி என பல்வேறு இடங்களில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வருவாய் துறையின் சார்பில் அத்தியாவசிய தேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து காவிரி வெள்ளத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப மாற்று இடம் வழங்க ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது' என்றார்.

பள்ளிக்கூடத்தில் தண்ணீர்

ஊஞ்சலூர் காவிரி கரை அருகே அரசு மேல் நிலைப் பள்ளிக்கூடம் உள்ளது. இந்தநிலையில் காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அதை ஒட்டியுள்ள புகளூரான் வாய்க்காலில் இருந்து பள்ளிக்கூட மைதானத்துக்கு தண்ணீர் புகுந்தது. இதனால் மாணவ, மாணவிகள் புதிதாக கட்டப்பட்டுள்ள பள்ளிக்கட்டிடத்துக்கு அழைத்து செல்லப்பட்டார்கள்.

இதேபோல் ஊஞ்சலூர் அருகில் உள்ள கொளாநல்லி சத்திரப்பட்டியில் காவிரி கரையோரம் உள்ள 47 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. பாதிக்கப்பட்டவர்கள் திரவுபதி அம்மன் கோவில் மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர். அனைவருக்கும் ஆற்றல் பவுண்டேசன் சார்பாக நேற்று முன்தினம் இரவு முதல் உணவு வழங்கப்பட்டது.

கொடுமுடி

கொடுமுடியில் இலுப்பை தோப்பு பகுதி, வடக்கு தெரு மாரியம்மன் கோவில் குடியிருப்பு பகுதி மற்றும் சென்னசமுத்திரம் மாரியம்மன் கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் காவிரி தண்ணீர் புகுந்தது. 69 வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. அதில் வசித்த 199 பேர் கொடுமுடியில் உள்ள தனியார் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுமட்டுமின்றி சென்னசமுத்திரத்தில் காவிரிக்கரை ஓரத்தில் உள்ள சுமார் 100 ஏக்கர் விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. கரும்பு, வாழை, மஞ்சள் பயிர்கள் நாசமாகின. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளார்கள். கடந்த 4 மாதத்தில் மட்டும் 4 முறை இதுபோல் வெள்ளம் புகுந்துவிட்டது. நாங்கள் எப்படி பயிர்களை காப்பாற்றுவது என்று விவசாயிகள் கவலை பட்டார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்