ரெயில்வே பெண் ஊழியரை பலாத்காரம் செய்ய முயன்ற கேரள வாலிபர் கைது

பாவூர்சத்திரத்தில் ரெயில்வே பெண் ஊழியரை பலாத்காரம் செய்ய முயன்ற கேரள வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-02-20 18:45 GMT

பாவூர்சத்திரத்தில் ரெயில்வே பெண் ஊழியரை பலாத்காரம் செய்ய முயன்ற கேரள வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பலாத்காரம் செய்ய முயற்சி

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ரெயில்வே கேட்டில் ஊழியராக கேரளாவை ேசர்ந்த 37 வயது பெண் பணியாற்றி வருகிறார். கடந்த 16-ந் தேதி இரவில் அந்த பெண் பணியில் இருந்தபோது அவரது அறைக்குள் மர்ம நபர் புகுந்தார்.

அவர் திடீரென்று அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், அறையில் இருந்து வெளியேறி சத்தம் போட்டார். அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஓடி வந்ததால் மர்ம நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

10 தனிப்படை

இதுகுறித்து தென்காசி ெரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தமிழக ெரயில்வே போலீஸ் கூடுதல் இயக்குனர் வனிதா, ெரயில்வே போலீஸ் துணைத் தலைவர் விஜயகுமார் ஆகியோரின் அறிவுரையின்படியும், நெல்லை துணை சூப்பிரண்டு பொன்னுச்சாமி நேரடி மேற்பார்வையில் விருதுநகர் இன்ஸ்பெக்டர் பிரியமோகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்குமார், மனோகரன், ஜெயக்குமார், மாரியப்பன், ரவிக்குமார் அடங்கிய 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

கேரள வாலிபர் கைது

இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பத்தனாபுரத்தைச் சேர்ந்த முரளி மகன் அனீஸ் (வயது 27) என்பவர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இந்த நிலையில் புளியரை பஸ் நிறுத்தத்தில் வைத்து அனீசை தனிப்படை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரை தென்காசி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட்டு பொன்பாண்டி, கைதான அனீைச 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவரை போலீசார் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

கற்பழிப்பு வழக்கு

இதுகுறித்து போலீஸ் துணை சூப்பிரண்டு பொன்னுச்சாமி கூறியதாவது:-

பாவூர்சத்திரத்தில் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற இடத்தில் மர்ம நபர் தனது காலணிகளை விட்டு சென்றிருந்தார். அதனை கைப்பற்றி அது யாருடையது? என்று விசாரணை நடத்தினோம். பின்னர் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளையும் ஆய்வு செய்தோம்.

அதை வைத்து விசாரணை நடத்தியபோது கேரள மாநிலத்தைச் சேர்ந்த அனீஸ் என்பவர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதும், பாவூர்சத்திரம் பகுதியில் பெயிண்டிங் தொழிலாளியாக இருப்பதும் தெரியவந்தது. அவர் வெளியூருக்கு தப்பிச் செல்ல முயன்றபோது, புளியரையில் வைத்து கைது செய்தோம். அனீஸ் மீது கேரள மாநிலத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் இதுபோன்ற வழக்குகள் உள்ளன. மேலும் குன்னிகோடு போலீஸ் நிலையத்தில் இவர் மீது கற்பழிப்பு வழக்கும் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்