நெல்லை சந்திப்பில் ரெயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நெல்லை சந்திப்பில் ரெயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
நெல்லை:
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு எஸ்.ஆர்.எம்.யு. ரெயில்வே தொழிற்சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சுற்றுலா என்ற பெயரில் கோயம்புத்தூர்-ஷீரடி எக்ஸ்பிரஸ் ரெயிலை தனியாருக்கு விற்பனை செய்வதை உடனே ரத்து செய்ய வேண்டும். 100 எக்ஸ்பிரஸ் ரெயில்களை தனியாருக்கு விற்கும் முடிவை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
எஸ்.ஆர்.எம்.யு. மத்திய சங்க துணைத்தலைவர் சுப்பையா தலைமை தாங்கினார். நெல்லை வெளிவட்ட கிளை செயலாளர் அய்யப்பன், தலைமை கிளை தலைவர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அஞ்சல் ஆர்.எம்.எஸ். அகில இந்திய செயற்குழு உறுப்பினர் சண்முகசுந்தரராஜா, தபால் துறை ஓய்வு பெற்றோர் சங்க நிர்வாகி கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.