தேனி-போடி இடையே ரெயில் பாதை அமைக்கும் பணி தீவிரம்
தேனி-போடி இடையே ரெயில் பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.;
மதுரை-போடி இடையே அகல ரெயில் பாதை அமைக்கும் திட்டம் நடந்து வருகிறது. இதில், மதுரை-தேனி இடையே ரெயில் பாதை அமைக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது அந்த பாதையில் தேனி-மதுரை இடையே இருமார்க்கமாக தினமும் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே மதுரை-போடி ரெயில் பாதை திட்டத்தில் மீதமுள்ள தேனி-போடி இடையேயான ரெயில் பாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ரெயில் பாதையில் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு, சிமெண்டு கர்டர்கள் போடப்பட்ட நிலையில், தற்போது இரும்பு தண்டவாள கம்பிகள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகள் வருகிற ஜனவரி மாதத்துக்குள் முடிவடையும் என்றும், ரெயில் பயன்பாட்டிற்கு வந்தபிறகு போடியில் இருந்து சென்னைக்கு நேரடியாக ரெயில் இயக்க ஆலோசனை நடத்தப்படும் என்று ரெயில்வே துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.