தண்டவாளத்தை கடந்து செல்ல பாதை கேட்டு பொதுமக்கள் ரெயில் மறியல் போராட்டம்

பேசின்பாலம்-வியாசர்பாடி ஜீவா ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடந்து செல்ல பாதை கேட்டு தண்டவாளத்தில் அமர்ந்து பொதுமக்கள் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-04-25 04:47 GMT

சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், வியாசர்பாடி பகுதிக்கு செல்வதற்கு பேசின்பாலம்-வியாசர்பாடி ஜீவா ரெயில் நிலையங்களுக்கு இடையே குறுக்கு வழியாக தண்டவாளத்தை கடந்து செல்வது வழக்கம்.

இந்த பகுதியில் சமூக விரோதிகள் ரெயில் பயணிகளிடம் செல்போன் பறிப்பது உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதுடன், தண்டவாளத்தை கடந்து செல்லும்போது ரெயில் மோதி உயிரிழப்புகளும் ஏற்பட்டது. இதனால் ரெயில்வே துறையினர் அந்த பகுதியில் இருந்த 2 பாதைகளையும் அடைத்து விட்டனர்.

இதனால் புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வியாசர்பாடிக்கு வரவேண்டும் என்றால் சுமார் 5 கி.மீ. தூரம் சுற்றி வர வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 100-க்கும் மேற்பட்டோர், தண்டவாளத்தை கடந்து செல்ல பாதை கேட்டும், அடைக்கப்பட்ட சிறிய பாதைகளை மீண்டும் திறந்து விடக்கோரியும் தண்டவாளத்தில் அமர்ந்து ரெயில் மறியலில் ஈடுபட்டனர் அப்போது சென்டிரலில் இருந்து அரக்கோணம் நோக்கி வந்த மின்சார ரெயில் சிறிது நேரம் நடுவழியில் நின்றது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் புளியந்தோப்பு போலீஸ் துணை கமிஷனர் ஈஸ்வரன் மற்றும் உதவி கமிஷனர்கள் செம்பேடு பாபு, அழகேசன், வியாசர்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் ரெயில்வே போலீசார் விரைந்து வந்து தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ரெயில்வே துறை மற்றும் ரெயில்வே போலீசாரிடம் பேசி மூடப்பட்ட பாதையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அதை ஏற்று மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். அதன்பிறகு மின்சார ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

Tags:    

மேலும் செய்திகள்