'ராகுல்காந்தியை தகுதி நீக்கம் செய்தது திட்டமிட்ட சதி'
‘எம்.பி. பதவியில் இருந்து ராகுல்காந்தியை தகுதி நீக்கம் செய்தது திட்டமிட்ட சதி’ என்று தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் போராட்டம்
காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து திண்டுக்கல்லில் காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியாகிரக போராட்டம் நேற்று நடந்தது.
இதில் தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்குக்கு வழங்கப்பட்ட தண்டனை அதிகபட்ச தண்டனை. இதன் மூலம் அவரை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்தது, உடனே இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது நமது நாடு ஜனநாயக நாடா? அரசியல் சாசன சட்டப்படி நடைபெறும் நாடா? என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
பக்கத்து நாடான மியான்மரில் ராணுவ ஆட்சி நடக்கிறது. அங்கு தான் அந்நாட்டு அதிபரை பதவி நீக்கம் செய்து, உடனே அவர் மீது வழக்கு தொடர்ந்து சிறை தண்டனை கொடுத்து ஜனநாயகத்தை முடக்கிய சம்பவம் நடந்துள்ளது. ஆனால் நம் நாட்டில் இதுபோன்ற சம்பவம் நடப்பது வேதனை அளிக்கிறது.
கருத்து சுதந்திரம்
நாட்டின் எதிர்காலம் குறித்து யாருக்கேனும் கருத்து வேறுபாடு இருந்தால் அதுகுறித்து பேசும் சுதந்திரம் உண்டு என நினைப்பவர்கள் அச்சப்படும் வகையில் மத்திய அரசின் செயல்பாடு உள்ளது. கருத்து சுதந்திரம் நசுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசிடம் கேள்வி கேட்கும் வகையில் அனைவரும் ஒன்று திரண்டு போராட வேண்டும். ராகுல்காந்தி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் ஏற்கனவே திட்டமிடப்பட்டு அடுத்தடுத்து அரங்கேற்றப்பட்ட நாடகம் ஆகும். எனவே இது சதிவேலை என்று தான் கூற வேண்டும். பிற்படுத்தப்பட்டோருக்கு எதிராக ராகுல்காந்தி பேசியதாக அவர் மீது குற்றம் சுமத்துகிறார்கள். ஆனால் அவர் அவ்வாறு பேசவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.