அரசியல் அதிகாரத்திற்காக ராகுல்காந்தி நடைபயணம் மேற்கொள்ளவில்லை; கே.எஸ்.அழகிரி பேச்சு

அரசியல் அதிகாரத்திற்காக ராகுல்காந்தி நடைபயணம் மேற்கொள்ளவில்லை என்று கே.எஸ்.அழகிரி பேசினார்.;

Update: 2022-12-12 19:43 GMT

ஜெயங்கொண்டம்:

புறக்கணிக்க வேண்டும்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்த பயணத்தின் நினைவாக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ேக.எஸ்.அழகிரி நேற்று அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா, தா.பழூரில் சுத்தமல்லி பிரிவு சாலை உள்ளிட்ட பகுதிகளில் கட்சி கொடியேற்றி, கல்வெட்டுகளை திறந்து வைத்து பொதுமக்களிடையே பேசினார். அப்போது அவர் பேசியதாவது;-

நாட்டில் மதத்தின் அடிப்படையிலோ, சாதியின் அடிப்படையிலோ எந்தவிதமான பிரிவினைவாதமும் இல்லாதநிலையில், ஒற்றுமையாக இருப்பது இந்தியாவின் தனி சிறப்பாகும். தற்போது ராகுல்காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை பயணத்தின் நோக்கமும் அதுவாகத்தான் உள்ளது. எனவே நாட்டில் உள்ள நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும். சாதி மற்றும் மதத்தின் பெயரால் பிரிவினைவாதத்தை உண்டாக்குபவர்களை நாம் புறக்கணிக்க வேண்டும்.

பதவி வேண்டாம் என்று...

அரசியல் அதிகாரத்திற்காக ராகுல்காந்தி நடை பயணம் மேற்கொள்ளவில்லை. அவர் பிரதமராக வேண்டும் என்று நினைத்திருந்தால், மன்மோகன் சிங் இருந்தபோதே அவர் பிரதமர் ஆகியிருக்கலாம். தனது தாயாரை போலவே பதவி வேண்டாம் என்று துறந்தவர் ராகுல்காந்தி. நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களுடைய பிரச்சினைகளை அவரே தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினார். அவரின் நடைபயணம் என்பது மக்களுக்குள் வேற்றுமை உணர்வை மாற்றி ஒற்றுமைப்படுத்துவதற்காகவே.

நாட்டில் 30-க்கும் மேற்பட்ட மதங்கள், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாதிகள் உள்ளன. இவற்றையெல்லாம் ஒற்றுமைப்படுத்த வேண்டும் என்பதே ராகுல் காந்தியின் நோக்கம். ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்காக பாடுபடும் பேரியக்கமே காங்கிரஸ். இதையொட்டியே காங்கிரஸ் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம், முதியோர்களுக்கான உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இதில் 100 நாள் வேலை திட்டம், திட்டங்களிலேயே உயர்ந்த திட்டம்.

துப்புரவு பணியாளர்கள் கோரிக்கை

இங்கு வந்தபோது என்னிடம் துப்புரவு பணியாளர்கள் 2 பேர் 15 ஆண்டுகளாக பணியாற்றுவதாகவும், ஆனால் பணி நிரந்தரம் கிடைக்கவில்லை என்றும், ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை என்றும் கூறினார்கள். இந்த கோரிக்கையை தமிழகம் முழுவதும் உள்ள பணியாளர்கள் அளித்த கோரிக்கையாக கருதி தமிழக அரசுக்கு தெரிவிப்பேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்