பழங்குடியின மக்களுடன் நடனமாடிய ராகுல்காந்தி
வயநாடு செல்லும் வழியில் ஊட்டிக்கு வந்த ராகுல்காந்தி, பழங்குடியின மக்களுடன் நடனமாடினார். ஒரு குழந்தையை தூக்கி கொஞ்சி மகிழ்ந்தார்.;
ஊட்டி
வயநாடு செல்லும் வழியில் ஊட்டிக்கு வந்த ராகுல்காந்தி, பழங்குடியின மக்களுடன் நடனமாடினார். ஒரு குழந்தையை தூக்கி கொஞ்சி மகிழ்ந்தார்.
கோவையில் வரவேற்பு
கர்நாடக மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல்காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். சட்டப்போராட்டத்தை தொடர்ந்து 4 மாதங்களுக்கு பிறகு நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.
இந்த நிலையில் ராகுல்காந்தி தனது சொந்த தொகுதியான கேரள மாநிலம் வயநாட்டுக்கு செல்வதற்காக நேற்று காலை 9 மணிக்கு டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு, காங்கிரஸ் கட்சி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
விண்வெளி வீரருடன் சந்திப்பு
அங்கிருந்து ராகுல்காந்தி காலை 9.25 மணிக்கு நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு காரில் புறப்பட்டார். அவருக்கு, வழிநெடுகிலும் மேள-தாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு திரண்டு நின்ற தொண்டர்களை பார்த்து அவர், காரில் இருந்தவாறு கையசைத்தபடி சென்றார்.
பின்னர் காலை 11.45 மணிக்கு ஊட்டி எல்லநள்ளியில் உள்ள தனியார் ஓட்டலுக்கு வந்த ராகுல்காந்தி, அங்கு இந்திய முன்னாள் விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவுடன் சுமார் 10 நிமிடங்கள் கலந்துரையாடினார். அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த சாக்லேட் வகைகளை பார்வையிட்டார்.
பழங்குடியின கிராமத்தில்...
இதையடுத்து பழங்குடியினரான தோடர் இன மக்களின் கிராமமான முத்தநாடு மந்துக்கு ராகுல்காந்தி சென்றார். அங்கு அவருக்கு, தலைவர் மந்தேஷ் குட்டன் தலைமையில் தோடர் இன மக்கள் பிரத்யேக பூத்துக்குளி சால்வை வழங்கி வரவேற்றனர். அவர்களுடன் ராகுல்காந்தி கலந்துரையாடினார்.
அதன்பிறகு தோடர் இன மக்களின் 'மூன்போ, அடையாள்வோ' கோவில்களுக்கு அவர் சென்றார். அப்போது அவருக்கு, கோவிலின் வழிபாட்டு முறை குறித்து தோடர் இன மக்கள் விளக்கம் அளித்தனர். குறிப்பாக தீக்குச்சி இல்லாமல் மரக்கட்டைகளை உரசி தீ மூட்டுவது குறித்து எடுத்துக்கூறினர். இதை ஆச்சரியத்துடன் ராகுல்காந்தி கேட்டறிந்தார்.
நடனம் ஆடினார்
இதற்கு முன்பு ஊட்டிக்கு வந்த முன்னாள் பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு, ராஜீவ்காந்தி ஆகியோருடன் தோடர் இன மக்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவரிடம் காண்பித்தனர். அதை ஆர்வமுடன் பார்த்து ரசித்தார்.
மேலும் தோடர் இன வாலிபர்கள் தங்களது உடல் வலிமையை வெளிக்காட்டும் வகையில் இளவட்டக்கல்லை தூக்கினர். அவர்களை ராகுல்காந்தி கை தட்டி உற்சாகப்படுத்தினார். பின்னர் தோடர் இன மக்களுடன் இணைந்து பாரம்பரிய நடனமாடினார். அப்போது ஒரு குழந்தையை தூக்கி கொஞ்சி மகிழ்ந்தார். இதனால் தோடர் இன மக்கள் குதூகலம் அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து ராகுல்காந்தி கூடலூர் வழியாக கார் மூலம் வயநாட்டுக்கு புறப்பட்டு சென்றார்.