மதுவாங்கி வரச்சொல்லி மிரட்டியதால் ஆத்திரம்: புகைப்பட கலைஞருக்கு சரமாரி கத்திக்குத்து - 5 பேர் கைது

காஞ்சீபுரத்தில் மதுவாங்கி வரச்சொல்லி மிரட்டியதால் ஆத்திரமடைந்த வாலிபர் ஒருவர் நண்பர்களுடன் சேர்ந்து புகைப்படக்கலைஞரை கத்தியால் குத்தினார்.

Update: 2022-08-21 12:53 GMT

காஞ்சீபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஓரிக்கை அண்ணாமலை நகர் பகுதியை சேர்ந்தவர் விக்கி (வயது 26). இவர் வீட்டிலேயே போட்டோ ஸ்டுடியோ வைத்து போட்டோகிராபராக வேலை செய்து வருகிறார்.

இந்தநிலையில், இவர் டெம்பிள் சிட்டி பகுதிக்கு நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, அந்தப் பகுதியில் மதுஅருந்தி கொண்டிருந்த 5 நபர்கள் அவரை மடக்கி திடீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், வாக்குவாதம் முற்றிய நிலையில் அந்த 5 பேரும் சேர்ந்து விக்கியை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காஞ்சீபுரம் தாலுகா போலீசார் படுகாயம் அடைந்த விக்கியை மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு விக்கிக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுப்பப்பட்டார். இந்த சம்பவம் குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்ன காஞ்சீபுரத்தை சேர்ந்த சரவணன் (20), எல்லப்பன் (20), கன்னியப்பன் என்கிற தனுஷ் (19), ஓரிக்கையை சேர்ந்த தனுஷ் (19) உள்பட 5 பேரை கைது செய்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விக்கி, எல்லப்பனை அழைத்து மதுவாங்கி வர சொல்லி மிரட்டியதாக தெரிகிறது. இதில் ஏற்பட்ட தகராறில், முன்விரோதத்தில் எல்லப்பன் அவரது நண்பர்களுடன் சேர்ந்து மதுபோதையில் விக்கியை தாக்கியது தெரியவந்தது. இந்நிலையில் புகைப்பட கலைஞர் விக்கியை கத்தியால் தாக்கிய 5 பேரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்