தொண்டி,
தொண்டி அருகே உள்ள கண்கொள்ளான் பட்டினம் கடற்கரை கிராமத்தில் அகோர வீரபத்திரர் கோவில் 77-ம் ஆண்டு திருவிழாவையொட்டி பாய்மர படகு போட்டி நடைபெற்றது. ஊராட்சி தலைவர் முகமது முஸ்தபா, கண்கொள்ளான் பட்டினம் கிராமத் தலைவர் உதயசந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். யூனியன் தலைவர் முகமது முக்தார், தி.மு.க. ஒன்றிய செயலாளர் செங்கமடை சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டிகளை ஆர். எஸ். மங்கலம் முன்னாள் யூனியன் தலைவர் வ.து.ந.ஆனந்த் தொடங்கி வைத்தார். 34 பாய்மர படகுகள் போட்டியில் கலந்து கொண்டன. போட்டியில் முதல் பரிசை நம்புதாளை கருப்பையா கார்மேகம், 2-வது பரிசை தொண்டி புதுக்குடி கருப்பையா ரெத்தினவேல், 3-வது பரிசை தொண்டி புதுக்குடி சீதாலெட்சுமி நாகவேல், 4-வது பரிசை முள்ளிமுனை சமய ராஜா, 5-வது பரிசை கோட்டைப்பட்டினம் புதுக்குடி குணா ஆகியோரது படகுகள் பெற்றன. ஒரு படகிற்கு 6 பேர் வீதம் படகை இயக்கினர். இதில் படகுகள் 12 கடல் மைல் தூரம் சென்று வந்தது. போட்டியாளர்கள் கடுமையான சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். வெற்றி பெற்ற படகின் உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. தொண்டி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் தொண்டி போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஏற்பாடுகளை படகு பந்தய ரசிகர்கள் குழுவினர் மற்றும் கண்கொள்ளான் பட்டினம் கிராம மக்கள் செய்திருந்தனர்.