பள்ளி மாணவர்களுக்கு வினாடி-வினா போட்டி
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு வினாடி-வினா போட்டி நடைபெற்றது.
கோத்தகிரி
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு வினாடி-வினா போட்டி நடைபெற்றது.
வினாடி-வினா போட்டி
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் கோத்தகிரியில் தாலுகா அளவிலான துளிர் ஜந்தர் மந்தர் அறிவியல் வினாடி-வினா போட்டி நடைபெற்றது. இதில் திரளான மாணவ-மாணவிகள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர். அங்குள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், கோத்தகிரி பகுதியில் உள்ள 30 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். போட்டியை பரமேஸ்வரன் தொடங்கி வைத்தார். ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் உதவி முதல்வர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். முன்னாள் மாவட்ட தொடக்கப்பள்ளி அலுவலர் கே.எம்.பெள்ளி வாழ்த்துரை வழங்கினார். தனியார் அறக்கட்டளை நிர்வாகி ராமதாஸ், பொரங்காடு சீமை நல சங்கத்தின் செயலரும், ஓய்வு பெற்ற ஆசிரியருமான போஜன், ஆசிரியர் குமார் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.
மாவட்ட போட்டிக்கு தகுதி
இளநிலை, இடைநிலை, மேல்நிலை ஆகிய 3 பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. இதில் அரவேனு, கேர்கம்பை அரசு உயர்நிலைப்பள்ளிகள், ஹில்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோத்தகிரி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகள் முதலிடத்தை பிடித்தன. மேலும் கேர்பெட்டா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கிரிஈஸ்வரா மெட்ரிக் பள்ளி, பாண்டியன் நினைவு மேல்நிலைப்பள்ளி, புனித அந்தோணியார் நடுநிலைப்பள்ளி 2-ம் இடத்தை பிடித்தன. கிரீன்வேலி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஓரசோலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 3-ம் இடம் பெற்றன. தொடர்ந்து சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் முதல் 2 இடங்களை பிடித்த பள்ளிகள், வருகிற 29-ந் தேதி ஊட்டியில் நடைபெற உள்ள மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றன. முன்னதாக ரெட்டி அனைவரையும் வரவேற்றார். முடிவில் பிரகாஷ் நன்றி கூறினார்.