வன்கொடுமை வழக்குகள் மீது விரைந்து நடவடிக்கை

வன்கொடுமை வழக்குகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கள்ளக்குறிச்சி கலெக்டர் உத்தரவிட்டார்.;

Update: 2022-07-02 15:34 GMT

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையினர் சார்பில் வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்த மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி, இதுவரை பதிவு செய்யப்பட்ட வன்கொடுமை வழக்குகள் குறித்தும், அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், பிழையுடையதாக கருதப்பட்ட வழக்குகள் மீது எடுக்கப்பட்ட நவடடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

நடவடிக்கை

பின்னர் அவர் பேசுகையில், அனைத்து வன்கொடுமை வழக்குகள் மீதும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோருக்கு தீருதவி விரைந்து வழங்க வேண்டும். வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின்கீழ் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அரசு அளிக்கும் தீருதவி, ஓய்வூதியம், வேலைவாய்ப்பு போன்ற சலுகைகள் விரைந்து கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வரும் காலங்களில் வன்கொடுமை நிகழ்வுகள் நடைபெறாதவகையில் விழிப்புணர்வு முகாம் நடத்த வேண்டும். பள்ளிகளில் சமூக நல்லிணக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனறார்.

கூட்டத்தில் குழு உறுப்பனர் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சாந்தி, துணை சூப்பிரண்டுகள் ராஜலட்சுமி, மகேஷ், தனி தாசில்தார் (ஆதிதிராவிடர் நலம்) நடராஜன், அலுவலர் சாரா ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த உறுப்பினர்கள் காமராஜ் (திருக்கோவிலூர்), பழனிசாமி (கள்ளக்குறிச்சி), கோவிந்தன் (சங்கராபுரம்), விஜய்மனோஜ் (கள்ளக்குறிச்சி), சீனுவாசன் (கல்வராயன்மலை), அலுவலர் சாரா ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேராதா உறுப்பினர்கள் சின்னசேலம் அன்புமணிமாறன், சுரேஷ், ஆறுமுகம் (சங்கராபுரம்) மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்