வீடுகளில் கியூ ஆர் கோடு ஸ்டிக்கர் விரைவில் ஒட்டப்படும்

வரிகள் செலுத்த, புகார்கள் தெரிவிக்க வீடுகளில் கியூ ஆர் கோடு ஸ்டிக்கர் விரைவில் ஒட்டப்படும் என்று மாநகராட்சி மேயர் சுஜாதா தெரிவித்தார்.

Update: 2023-04-07 17:53 GMT

டிஜிட்டல் மயம்

வேலூர் மாநகராட்சி எல்லைக்குள் வசிக்கும் பொதுமக்கள் தங்களது சொத்து, குடிநீர் உள்ளிட்ட வரிகள் செலுத்துவதற்கும் அடிப்படை வசதிகள் தொடர்பான புகார்கள் அளிப்பதற்கும் மாநகராட்சி அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மாநகராட்சி அலுவலகங்களில் புகார் மனுக்களையும், வரிகளையும் செலுத்தி வருகின்றனர். இருப்பினும் சர்வர் பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால் வரிசெலுத்துவதிலும், புகார்கள் அளிப்பதிலும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.

தற்போது ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியால் அடித்தட்டு மக்களும் டிஜிட்டல் மயத்தை நோக்கி நகர்ந்து வருகின்றனர். அனைத்து இடங்களிலும், பொருட்களிலும் கியூ ஆர் கோடு முறை பின்பற்றப்படுகிறது. அதை ஸ்கேன் செய்தால் நமக்கு தேவையான தகவல்கள் கிடைத்து விடுகிறது.

விரைவில் ஒட்டப்படும்

இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பொதுமக்கள் எளிய முறையில் வீட்டில் இருந்தபடியே சொத்துவரி, குடிநீர் வரி போன்ற பல்வேறு வரி இனங்களை செலுத்துவதற்கும், அடிப்படை வசதிகள் குறித்து புகார் அளிக்கவும் கியூ ஆர் கோடு முறையை தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ளது. இந்த நடைமுறை வேலூர் மாநகராட்சியில் செயல்படுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி மேயர் சுஜாதா கூறியதாவது:-

பொதுமக்கள் வரி இனங்களை எந்தவித சிரமமும் இன்றி வீட்டில் இருந்தபடியே செலுத்துவதற்காக இந்த கியூ ஆர் கோடு முறை பின்பற்றப்பட உள்ளது. கியூ ஆர் கோடு ஸ்டிக்கர் வீடுகளில் ஒட்டப்படும். இதன் மூலம் வரிகள் செலுத்தவும், புகார்களை தெரிவிக்கவும் முடியும். முதல்கட்டமாக விரைவில் மாநகராட்சி பகுதியில் ஏதேனும் ஒரு வார்ட்டில் உள்ள வீடுகளில் ஒட்டப்பட உள்ளது. பின்னர் அனைத்து பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். இதற்கான பணிகள் நடந்து வருகிறது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்