புதுமை பெண் திட்டம் வரும் காலத்தில் இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்தும் - அரவிந்த் கெஜ்ரிவால்

புதுமையான திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்துகிறார் என்றும் புதுமை பெண் திட்டம் வரும் காலத்தில் இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்தும் என்றும் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பாராட்டி பேசினார்.;

Update: 2022-09-05 17:12 GMT

 

சிறப்பான பாதை

அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் உதவித்தொகை வழங்கும் புதுமை பெண் திட்டத்தை சென்னை பாரதி மகளிர் கல்லூரியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னதாக தமிழகத்தில் 26 தகைசால் பள்ளிகள் மற்றும் 15 மாதிரி பள்ளிகள் திட்டத்தை டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைத்து உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

வருங்காலங்களில் தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு மட்டுமல்ல, நாட்டில் உள்ள ஒட்டுமொத்த பெண்களுக்குமே புதுமை பெண் திட்டம் சிறப்பான பாதையை உருவாக்கி தரும்.

ஆச்சரியம்

கடந்த மார்ச் மாதம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு வந்தபோது அங்குள்ள அரசு பள்ளிகளையும், கிளினிக்களையும் பார்வையிடுவதாக தகவல் வந்தது. நான் ஆச்சரியம் அடைந்தேன். நமது நாட்டு முதல்-மந்திரிகள் மற்றொரு மாநிலத்துக்கு சென்று அரசு பள்ளியை பார்வையிடுவது அரிது. பெரும்பாலான நேரங்களில் அரசியல்வாதிகள் அரசியல்தான் செய்வார்கள். குறைவான நேரத்தையே வளர்ச்சிக்காக செலவிடுவார்கள்.

எனவே தனிப்பட்ட முறையில் அவரை மகிழ்ச்சியோடு வரவேற்று அங்கு அழைத்துச்சென்றேன். பின்னர் டெல்லியில் பத்திரிகையாளர் சந்திப்பில், தமிழகத்திலும் மாதிரி பள்ளிகள் திறக்கப்படும் என்றும், அந்த பள்ளி திறப்பு விழாவில் என்னை அழைப்பதாகவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதற்கு 2 அல்லது 3 ஆண்டுகள் நடக்கும் என்று நினைத்தேன். ஆனால் அதை 6 மாதத்திலேயே அவர் நிறைவேற்றி காட்டியிருப்பதால் மகிழ்ச்சி கலந்த ஆச்சரியத்தில் திளைக்கிறேன்.

மாநில அரசுகள் செயல்படுத்தும் நல்ல திட்டங்களை ஒருவருக்கொருவர் பரஸ்பரமாக கற்றறிய வேண்டும். புதுமை பெண் திட்டம் வரும் காலத்தில் இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்துவதாக இருக்கும். நன்றாக படிக்கும் மாணவிகள் வசதியாக இல்லாவிட்டாலும் தங்கள் படிப்பை தடையின்றி தொடர இந்த திட்டம் உதவும். இந்த திட்டம் மூலம் பண உதவி கிடைப்பதால், மாணவி தொடர்ந்து கல்லூரிக்கு செல்லவும், அதன் மூலம் முன்கூட்டியே திருமணம் ஆவதை தடுக்கவும் முடியும். ஒட்டுமொத்த நாடே உன்னிப்பாக கவனித்து வரும் புதுமை பெண் திட்டம், தமிழகத்தில் மட்டுமல்ல ஒட்டுமொத்த நாடு முழுவதும் சீர்திருத்தத்தை ஏற்படுத்தும்.

கல்வி என்பது உரிமை

நமது நாட்டில் 27 கோடி மாணவர்கள் பள்ளிக்கு செல்கிறார்கள். இதில் 66 சதவீதம் பேர் அதாவது 18 கோடி பேர் அரசு பள்ளியில் படிக்கிறார்கள். தமிழகம், டெல்லி உள்பட சில மாநிலங்களை தவிர பெரும்பாலான மாநிலங்களில் உள்ள அரசு பள்ளிகள் பரிதாபகரமான நிலையில் உள்ளன. உலகிலேயே வளர்ச்சியடைந்த முதல் நாடாக இந்தியா வரவேண்டும் என்று நாம் விரும்பினாலும், 66 சதவீதம் மாணவர்களுக்கு சரியான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கவில்லை என்றால், நாடு எப்படி வளர்ச்சியடையும்? நீண்டநெடிய உரை நிகழ்த்துவதன் மூலம் நாடு வளர்ச்சியடைந்துவிடுமா? தனியார் பள்ளிகளை விடவும் அரசு பள்ளிகளில் தரமான கல்வி கொடுக்காத வரையிலும் வளர்ச்சியடைந்த நாடாக உருவெடுக்கவேண்டும் என்ற கனவு நிறைவேறாது.

பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் பாரபட்சமின்றி கல்வி இலவசமாக கிடைக்கவேண்டும். கல்வி என்பது அவர்களின் உரிமை. ஒவ்வொரு குழந்தைக்கும் நல்ல, தரமான, இலவச கல்வி வழங்கவேண்டும் என்பது அரசுகளின் கடமை. நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளில் தேவையான கல்வியை நாம் இன்னும் வழங்கவில்லை. இப்போது நாம் அனைவரும் ஒன்றாக இணைந்திருக்கிறோம்.

இணைந்து செயல்பட்டால்...

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் தொடங்கி இருக்கிறார். நாங்கள் டெல்லியில் தொடங்கி இருக்கிறோம். இதில், அனைத்து மாநில அரசுகளும் மத்திய அரசும் ஒன்றாக இணைய வேண்டும். அப்படி இணைந்து செயல்பட்டால் இன்னும் 5 ஆண்டுகளில் நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் சிறப்பான கல்வியை நம்மால் வழங்கமுடியும்.

சில மாநிலங்களில் அரசு பள்ளிகள் மூடப்படுவதாக வரும் செய்திகள் கவலையளிக்கின்றன. ஒரு மாநிலத்தில் அரசு பள்ளியில் மாணவர்களிடம் தலா ரூ.500 மாதந்தோறும் வசூலிக்கப்படுகிறது. அரசு பள்ளிகளை மூடினால், ஏழை மாணவர்கள் எங்கே சென்று படிப்பார்கள்? ஏழை எப்படி தன் பிள்ளைக்கு கல்வியறிவை பெற வைக்கமுடியும்? நமது நாட்டில் 3-ல் 2 பங்கு மாணவர்கள் படிப்பறிவு இல்லாதவர்களாக இருக்கிறார்கள். இப்படி இருந்தால் நாடு எப்படி வளர்ச்சியடையும்? புதுமையான திட்டங்களை செயல்படுத்தியதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். புது திட்டத்தை அறிமுகப்படுத்தும்போது என்னை தொடர்ந்து அழைப்பார் என்று கருதுகிறேன். டெல்லியில் புது திட்டத்தை அறிமுகப்படுத்தும்போது, நான் அவரை அழைப்பேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

மாணவிகள் உற்சாகம்

இந்த விழாவில் பேசிய டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், புதுமைப் பெண் திட்டம் என்று தமிழில் உச்சரித்து பேசினார். உடனே அங்கிருந்த மாணவிகள் அனைவரும் உற்சாகமாக கைதட்டி மகிழ்ந்தனர். உடனே முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பின்னால் அமர்ந்திருந்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை நோக்கி திரும்பி, 'நான் சரியாகத்தானே உச்சரித்தேன்?' என்று ஆங்கிலத்தில் கேட்டார். சரிதான் என்று அமைச்சர் பதிலளித்ததும், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தனது பேச்சை தொடர்ந்தார்.

டெல்லியில் இருந்து தமிழகம் வரும் அரசியல்வாதிகள் பொதுவாக இங்குள்ள அரசியல்வாதிகளை 'ஜி' என்று அழைப்பது வழக்கமாக உள்ளது. பாரதி மகளிர் கல்லூரியில் நடந்த விழாவில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார். அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பெயரை உச்சரிக்கும் போதெல்லாம், 'சகாப்' என்ற மரியாதைச் சொல்லையும் சேர்த்து குறிப்பிட்டு பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்