பெண் என்ஜினீயரை கீழே தள்ளி 12 பவுன் தாலி சங்கிலி பறிப்பு
திருச்சி உறையூரில் பெண் என்ஜினீயரை கீழே தள்ளி 12 பவுன் தாலி சங்கிலியை பறித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருச்சி உறையூரில் பெண் என்ஜினீயரை கீழே தள்ளி 12 பவுன் தாலி சங்கிலியை பறித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெண் என்ஜினீயர்
திருச்சி உறையூர் குழுமணி ரோடு சுப்பிரமணிய நகர் வேதா அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணன். இவரது மனைவி கவிதா (வயது 45). இவர் உறையூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் வேலை முடிந்ததும் வீட்டுக்கு செல்வதற்காக உறையூரில் இருந்து பஸ்சில் சுப்பிரமணியநகருக்கு வந்தார். பின்னர் அவர் பஸ்சில் இருந்து இறங்கி வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.
சங்கிலி பறிப்பு
அப்போது, அங்கு நடந்து வந்த 3 மர்ம ஆசாமிகள் திடீரென்று கவிதாவை கீழே தள்ளிவிட்டு அவரது கழுத்தில் கிடந்த 12 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடினர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சல் போட்டார். அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் மர்ம ஆசாமிகள் தப்பி ஓடிவிட்டனர். இதில் மர்ம ஆசாமிகள் தள்ளிவிட்டதில் கவிதா காயம் அடைந்தார்.
இது குறித்து கவிதாவின் கணவர் ராஜேஷ்கண்ணன் உறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்.