கோவையில் 22 ஆயிரம் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல்
கோவையில் 22 ஆயிரம் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல்
கோவை
கோவையில் 22 ஆயிரம் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட வளர்ச்சி கண்காணிப்பு குழு தலைவர் பி.ஆர்.நடராஜன் எம்.பி. தெரிவித்து உள்ளார்.
ஆய்வு கூட்டம்
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கிராந்திகுமார் முன்னிலை வகித்தார். இதில் பங்கேற்ற கண்காணிப்பு குழுவின் தலைவர் பி.ஆர்.நடராஜன் எம்.பி. தலைமை தாங்கி பேசும்போது கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மத்திய, மாநில அரசுகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்கள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள், பையோ மைனிங், ரேஸ்கோர்ஸ் பகுதியில் மாதிரி சாலை, ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம், நூலகம் மற்றும் அறிவுசார் மையம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர தேவையான நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
சுய உதவி குழுக்களுக்கு நிதி
கோவையில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நடப்பு 2022-23 ஆண்டிற்கு ரூ.750கோடி நிதி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு முழுவதும் வழங்கப்பட்டு உள்ளது. தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் அரசால் விலை ஆதாரத் திட்டத்தின் கீழ் கோவை, காரமடை, செஞ்சேரி, நெகமம், பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, அன்னூர், தொண்டாமுத்தூர் மற்றும் சூலூர் ஆகிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் 2023-ம்ஆண்டிற்கு அரவை கொப்பரை கிலோ ஒன்றுக்கு ரூ.108.60-க்கும், பந்து கொப்பரை கிலோ ஒன்றுக்கு ரூ.117.50 என்ற விலையில் மொத்தம் 22 ஆயிரம் டன் கொப்பரை கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரதமரின் அனைவருக்கும் வீடுதிட்டத்தின் கீழ் நடப்பு நிதிஆண்டில் ரூ.19.11 கோடியில், 557 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.
மேலும், நெடுஞ்சாலைகளில் கட்டப்பட்டு வரும் பாலங்கள், சாலை மேம்பாட்டுப் பணிகள் உள்பட பல்வேறு துறைகள் சார்பில் மேற்கொள்ளப்படும் அரசின் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் எம்.எல்.ஏ.க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், ஏ.கே.செல்வராஜ், அம்மன் அர்ச்சுணன், பி.ஆர்.ஜி.அருண்குமார், செ.தாமோதரன், வி.பி.கந்தசாமி, கே.ஆர்.ஜெயராமன், அமுல் கந்தசாமி, வானதி சீனிவாசன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், கூடுதல் கலெக்டர் அலர்மேல் மங்கை, மாவட்ட வருவாய் அதிகாரி லீலாஅலெக்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.