புரட்டாசி முதல் சனிக்கிழமை; பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி நெல்லை பெருமாள் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;
புரட்டாசி மாதங்களில் பெருமாள் கோவில்களில் வழிபாடு நடத்துவது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி நேற்று நெல்லை மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
நெல்லை அருகே மேல திருவேங்கடநாதபுரத்தில் அமைந்துள்ள தென் திருப்பதி என பக்தர்களால் அழைக்கப்படும் வெங்கடாஜலபதி கோவிலில் மூலவர் வெங்கடாஜலபதிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. அங்கு அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
பாளையங்கோட்டை அழகியமன்னார் ராஜகோபால சுவாமி கோவிலில் காலையில் பெருமாளுக்கு திருமஞ்சனம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. சுவாமி மீது சூரிய ஒளி விழுந்ததை பக்தர்கள் பார்த்து வழிபட்டனர்.
நெல்லை சந்திப்பு வரதராஜ பெருமாள் கோவில், நெல்லை திருப்பதி, டவுன் கரியமாணிக்க பெருமாள் கோவில், லட்சுமி நரசிங்க பெருமாள் கோவில், சி.என்.கிராமம் ராஜகோபால சுவாமி கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் நேற்று அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இரவில் கருட சேவை உற்சவம் நடந்தது. பக்தர்களுக்கு துளசி, துளசி தீர்த்தம், மஞ்சள் பொடி, குங்குமம் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது.
அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில், காட்டு ராமர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதேபோல் வருகிற 30-ந்தேதி, அக்டோபர் மாதம் 7-ந்தேதி, 14-ந்தேதி ஆகிய நாட்களிலும் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.