புரட்டாசி 2-வது சனிக்கிழமை; பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.
புரட்டாசி 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.
சிறப்பு வழிபாடு
புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் குடும்பத்தில் சகல பாவங்களும் நீங்கி சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இதனால் பெருமாள் கோவில்களில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதங்களில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக கோவில்களில் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவிலுக்குள் சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தமிழக அரசு தடை விதித்தது. இதனால் பெருமாள் கோவில்களில் பக்தர்கள் இல்லாமல் புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு நடந்தது. தற்போது தடைகள் அனைத்தும் நீக்கப்பட்டதால் நேற்று அனைத்து பெருமாள் கோவில்களிலும் புரட்டாசி 2-வது சனிக்கிழமை சிறப்பு வழிபாடு வெகுசிறப்பாக நடந்தது.
குருவாயூரப்பன் அலங்காரம்
தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் நேற்று புரட்டாசி 2-வது சனிக்கிழமை வழிபாடு கோலாகலமாக நடந்தது. நிகழ்ச்சியையொட்டி அதிகாலையில் கோ பூஜை மற்றும் விஸ்வரூப தரிசனம் நடந்தது. பின்னர் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடந்தது. பெருமாள் நேற்று குருவாயூரப்பன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். குருவாயூரப்பன் அலங்காரத்தில் பெருமாளை தரிசிப்பது புண்ணியம் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி தமிழ்செல்வி, தலைமை அர்ச்சகர் வைகுண்டராமன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். பக்தர்களுக்கு துளசி பிரசாதமாக வழங்கப்பட்டது.
தென்திருப்பேரை
ஸ்ரீவைகுண்டம், நத்தம், திருப்புளியங்குடி, இரட்டை திருப்பதி, பெருங்குளம், தென்திருப்பேரை, திருக்கோளூர், ஆழ்வார் திருநகரி ஆகிய கோவில்களில் பக்தர்கள் காலை முதல் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்தனர். இதை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் உற்சவ பெருமாள் புஷ்ப அலங்காரத்துடன் காட்சியளித்தார். பக்தர்கள் கார், வேன், ஆம்னி பஸ் மூலமாக வந்து தரிசனம் செய்தனர். பக்தர்கள் சிரமமின்றி வழிபட வசதியாக கம்புகள் கட்டி வரிசைப்படுத்தி கோவிலுக்குள் செல்ல ஏற்பாடு செய்திருந்தனர். மேலும் பேரூராட்சி நிர்வாகம், கோவில் நிர்வாகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஆழ்வார் திருநகரி போலீஸ் நிலையம் ஆகியன சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள், குடிநீர் வசதிகள் செய்யப்பட்டது. விழா ஏற்பாடுகளை அந்தந்த கோவில் நிர்வாக அலுவலர்கள் செய்திருந்தனர்.
கோவில்பட்டி
கோவில்பட்டி சுந்தரராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடந்தது.
இதையொட்டி இரவு 8 மணிக்கு திருவீதி உலா, கருட சேவை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.