டிராக்டரில் மின்சாரம் தாக்கி புதுமாப்பிள்ளை சாவு
முதுகுளத்தூரில் டிராக்டரில் மின்சாரம் தாக்கி புதுமாப்பிள்ளை இறந்தார். நிவாரணம் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூரில் டிராக்டரில் மின்சாரம் தாக்கி புதுமாப்பிள்ளை இறந்தார். நிவாரணம் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுமாப்பிள்ளை சாவு
முதுகுளத்தூர் காந்தி நகரைச் சேர்ந்த பாண்டி மகன் பாலமுருகன் (வயது 26). இவர் முதுகுளத்தூர் ஆற்றுப்பாலம் அருகே டிராக்டரில் பழுது பார்த்த போது எதிர்பாராதவிதமாக உயர் மின் அழுத்த கம்பியில் டிராக்டர் உரசியதால் பாலமுருகன் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
இச்சம்பவம் அறிந்த போலீசார் பாலமுருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பாலமுருகனுக்கு கடந்த 6 மாதத்திற்கு முன் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
சாலை மறியல்
இந்நிலையில் பாலமுருகனின் உறவினர்கள் திடீரென அரசு நிவாரணம் வழங்க கோரி பரமக்குடி-முதுகுளத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இத்தகவல் அறிந்த மாவட்ட துணை சூப்பிரண்டு சின்னகண்ணு, கமுதி மணிகண்டன் மற்றும் முதுகுளத்தூர் தாசில்தார் சிவக்குமார் ஆகியோர் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்கள் கூறுகையில் நாங்கள் பலமுறை இப்பகுதியில் உயர் அழுத்த மின்கம்பி தாழ்வாக செல்கிறது என மின்சார வாரியத்தில் மனு அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் தெரிவித்தனர். மேலும் இறந்தவர் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.