தங்கம் வென்ற புதுக்கோட்டை வீராங்கனை

காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் புதுக்கோட்டை வீராங்கனை தங்கம் வென்றார். தந்தை இறப்பு செய்தி கேட்டு கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

Update: 2022-12-01 19:27 GMT

பளுதூக்கும் போட்டி

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே கல்லுக்காரன்பட்டியை சேர்ந்தவர்கள் செல்வமுத்து-ரீட்டா மேரி. இந்த தம்பதி கடந்த 20 ஆண்டுகளாக தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் மூத்த மகள் லோகேஸ்வரி.

இவர் பட்டுக்கோட்டை அருகில் உள்ள கரம்பயம் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர், சிறு வயது முதலே பளுதூக்கும் போட்டியில் ஆர்வம் கொண்டிருந்தார். இந்நிலையில் லோகேஸ்வரி மாவட்ட, மாநில அளவில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு பரிசுகளை வென்றுள்ளார்.

தந்தை இறப்பு

இந்த நிலையில் தற்போது நியூசிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் கலந்து கொள்வதற்காக லோகேஸ்வரி சென்றிருந்தார். இதையடுத்து பளுதூக்கும் போட்டி நேற்று முன்தினம் இரவு நடைபெறுவதாக இருந்தது. இதற்கிடையில் லோகேஸ்வரியின் தந்தை செல்வமுத்து நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

தந்தை இறந்த செய்தியை மகளுக்கு தெரிவித்தால் மகள் போட்டியில் தோல்வி அடைந்து விடுவார் என்று எண்ணிய அவரது தாய் ரீட்டா மேரி தனது மகளுக்கு தந்தை இறந்த செய்தியை தெரிவிக்க வேண்டாம் என கூறிவிட்டார்.

தங்கம் வென்றார்

இந்நிலையில், பளுதூக்கும் போட்டியில் 52 கிலோ எடை பிரிவில், 350 கிலோ எடையை தூக்கி லோகேஸ்வரி தங்கப்பதக்கம் வென்றார். அவர் வெற்றி மகிழ்ச்சியில் இருந்து வந்தார். இதற்கிடையே அவருக்கு அவரது தந்தை இறந்த செய்தி தெரிவிக்கப்பட்டது.

தங்கம் வென்ற சந்தோஷம் சிறிது நேரம் கூட நீடிக்காமல் லோகேஸ்வரிக்கு அவரது தந்தை இறந்த செய்தி பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இதனால் அவர் அங்கு கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதையடுத்து போட்டிக்கு சென்ற வீரர்கள் அவரை அமைதிப்படுத்தினர்.

அரசு ேவலை வழங்க வேண்டும்

இந்நிலையில் நேற்று கந்தர்வகோட்டையில் கல்லுக்காரன் பட்டியில் லோகேஸ்வரியின் தந்தை உடல் அடக்கம் செய்யப்பட்டது.

லோகேஸ்வரியின் குடும்பம் தற்போது மிகுந்த வறுமையில் வாடி வருகிறது. ஆகவே இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த தங்கமங்கை லோகேஸ்வரியின் குடும்பத்தினருக்கு மத்திய, மாநில அரசுகள், அரசு வேலை, குடியிருக்க வீடு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என அவரது குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்