பொதுகழிப்பறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்
எரவாஞ்சேரி கடைவீதியில் பொதுகழிப்பறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பெண் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
குடவாசல்:
திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஊராட்சி ஒன்றியம் மணவாளநல்லூர் ஊராட்சியில் உள்ள எரவாஞ்சேரி ஒரு சிறிய நகரம். இப்பகுதிக்கு கும்பகோணம், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய பெருநகரங்களில் இருந்து பஸ் வசதி உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து செல்கின்றனர். இந்த சிறிய நகரத்தில் அரசு அலுவலகங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், வங்கிகள், ஜவுளி, மளிகை கடைகள், இருசக்கர வாகன விற்பனை நிறுவனங்கள், உணவகங்கள் போன்ற பல்வேறு நிறுவனங்களில் ஆண்கள், பெண்கள் பலர் வேலை செய்து வருகின்றனர். குறிப்பாக இப்பகுதிக்கு வந்து செல்லும் பெண்கள் பொது கழிப்பிட வசதி இல்லாததால் பெண்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். இதுகுறித்து இக்கடைவீதியில் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் பலமுறை அரசுக்கு கோரிக்கை விடுத்தும் இந்த கோரிக்கையை நிறைவேற்றப்படவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர். எனவே இப்பகுதி பெண்களின் நலம் கருதி மாவட்ட கலெகடர் உடனடியாக நடவடிக்கை எடுத்து பொது கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என இப்பகுதி பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.