பொது கழிப்பறைகளை முறையாக பராமரிக்கவில்லை

திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில் பொதுகழிப்பறைகளை முறையாக பராமரிக்கவில்லை என்று தி.மு.க. கவுன்சிலர் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2023-05-31 19:00 GMT

மாநகராட்சி கூட்டம்

திண்டுக்கல் மாநகராட்சியின் கூட்டம் மேயர் இளமதி தலைமையில் நேற்று நடைபெற்றது. துணை மேயர் ராஜப்பா, ஆணையர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் மொத்தம் 108 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-

தனபாலன் (பா.ஜ.க.) :- எனது வார்டில் 21 தெருவிளக்குகள் எரியவில்லை. மின்ஊழியர்கள் பற்றாக்குறையால் தெருவிளக்குகளை சரிசெய்ய முடியவில்லை.

ஜோதிபாசு (மா.கம்யூ) :- தெருவிளக்குகள் எரியாததால் வார்டு மக்களின் கேள்விக்கு பதில் அளிக்க முடியவில்லை. தெருவிளக்கு பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும்.

ஆணையர்:- நகர் முழுவதும் 300 தெருவிளக்குகள் எரியவில்லை. அதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதிய தெருவிளக்குகளை பொருத்தும் பணி விரைவில் தொடங்கும்.

இந்திராணி (தி.மு.க.) :- எனது வார்டில் மழைநீர் சேமிப்பு திட்டம் செயல்படுத்த இருக்கும் 4 கிணறுகளிலும் மின்மோட்டார்கள் இருக்கின்றன. அதையும் சரிசெய்தால் வறட்சியில் தண்ணீர் பிரச்சினை ஏற்படாது. மோட்டார் இருக்கும் பகுதி புதர்மண்டி கிடப்பதால் பாம்புகள் தொல்லையும் உள்ளது.

ஆணையர்:- மழைநீர் சேமிப்பு திட்டத்தில் வாய்ப்பு இருக்கிறதா? என்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

நித்யா (தி.மு.க.) :- திட்ட பணிகளுக்கு பூமிபூஜை நடக்கும் போது சம்பந்தப்பட்ட வார்டு கவுன்சிலர்களை அழைக்க வேண்டும். கவுன்சிலர்கள் மரியாதையை கேட்டு வாங்கும் நிலையை ஏற்படுத்த கூடாது.

ஆணையர்:- கவுன்சிலர்களுக்கு தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

குழுக்களுக்கு முக்கியத்துவம்

மாரியம்மாள் (மா.கம்யூ) :- மேற்கு ரதவீதியில் வாணிவிலாஸ் முதல் மொச்சைகொட்டை விநாயகர் கோவில் வரை குடிநீர் பகிர்மான குழாய் பதிக்க வேண்டும்.

மேயர்:- பகிர்மான குழாய் பதிக்க அதிகாரிகள் திட்ட மதிப்பீடு தயாரிக்க வேண்டும்.

பாஸ்கரன் (அ.தி.மு.க.) :- எனது வார்டில் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சாலை அமைக்கப்பட்டு இருக்கிறது.

மேயர்:- கவுன்சிலர்கள் பரிந்துரைத்த பகுதியில் தான் பணிகள் நடக்கிறது. எந்தவித பாகுபாடும் இல்லாமல் பணிகள் நடக்கின்றன. திண்டுக்கல் மக்களின் தேவை அறிந்து அனைத்து வார்டுகளிலும் வளர்ச்சி பணிகள் நடைபெறும்.

துணைமேயர்:- எனது வார்டில் கூட இதுவரை எந்த பணிகளும் நடைபெறவில்லை. அ.தி.மு.க., கூட்டணி கட்சி வார்டுகளில் தான் பணிகள் அதிகமாக நடக்கின்றன.

கணேசன் (மா.கம்யூ) :- திண்டுக்கல்லில் பெரிய நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடுகின்றன. மாநகராட்சி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுத்து வரி வசூல் செய்ய வேண்டும்.

பிலால்உசேன் (தி.மு.க.) :- மண்டல அலுவலகம் செயல்படுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்திராணி (தி.மு.க.) :- மக்களுக்கு சுகாதார பணிகளை செய்வதற்கு ஆர்வமாக இருக்கிறேன். எனவே சுகாதாரக்குழுவுக்கு பொறுப்புகளை கொடுக்க வேண்டும். ரப்பர் ஸ்டாம்பாக இருக்க விரும்பவில்லை. மண்டல தலைவர்களுக்கு முக்கியத்துவம் இல்லை என்று கூறுகின்றனர். மாநகராட்சி குழுக்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

(இதையடுத்து தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரின் பார்வையும் அவர் பக்கம் திரும்பியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது)

மேயர்: சபை நாகரிகம் கருதி பேச வேண்டும்.

முகமதுசித்திக் (தி.மு.க.) :- பிற மாநகராட்சிகளில் குழுக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போன்று நமது மாநகராட்சியிலும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

விளம்பர போர்டுகள்-ஆக்கிரமிப்புகள்

ஜான்பீட்டர் (தி.மு.க.):- திருவிழா, திருமணத்துக்கு அதிக அளவில் விளம்பர போர்டுகள் வைக்கப்படுகின்றன. அதற்கு கட்டணம் வசூலிக்க வேண்டும்.

கணேசன் (மா.கம்யூ) :- திருவிழா, அரசியல் நிகழ்ச்சிகளுக்கு விளம்பர போர்டு வைக்க விதிவிலக்கு அளிக்க வேண்டும்.

ஜோதிபாசு (மா.கம்யூ) :- முறைப்படி அனுமதி பெறாமல் விளம்பர போர்டு வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஆணையர்:- அனைத்து விதமான விளம்பர போர்டுகள் வைப்பதற்கும் கட்டணம் செலுத்தி முறைப்படி அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாமல் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

தனபாலன் (பா.ஜ.க.):- விவே கானந்தா நகரில் பாதாள சாக்கடையில் கசிவு ஏற்பட்டு ஓராண்டாக கழிவுநீர் வெளியேறி தெருவில் ஓடுகிறது.

ஆணையர்:- பாதாள சாக்கடை பிரச்சினை சரிசெய்யப்படும்.

ஜான்பீட்டர் (தி.மு.க.) :- ஒடுக்கத்தில் உள்ள மாநகராட்சி நிலம் தனியார் ஆக்கிரமிப்பில் இருக்கிறது. அதை மீட்க வேண்டும். போலி டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆணையர்:- அதுபற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. மாநகர் முழுவதும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, மாநகராட்சி இடங்கள் வேலியிட்டு பாதுகாக்கப்படும். இதற்காக கலெக்டருக்கு அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. போலி டாக்டர்கள் மீது சுகாதாரத்துறை தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுதொடர்பாக பரிந்துரை செய்யப்படும்.

கார்த்திக் (காங்கிரஸ்) :- எனது வார்டில் தான் அடிக்கடி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகின்றன. அதேபோல் அனைத்து வார்டுகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

பொதுக்கழிப்பறைகள்

பிலால்உசேன் (தி.மு.க.) :- ஆம்னி பஸ் நிறுத்தத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.

விஜயா (தி.மு.க.) :- பாறைப்பட்டியில் மாநகராட்சி நிலம் தனியாரின் ஆக்கிரமிப்பில் இருக்கிறது. அதையும் மீட்க வேண்டும்.

இந்திராணி (தி.மு.க.) :- நான் சுகாதாரக்குழு தலைவராக இருப்பதால் நகர் முழுவதும் ஆய்வு செய்தேன். அதில் பொதுக்கழிப்பறைகள் சுகாதாரம் இல்லாமல் இருப்பது தெரியவந்தது. பொதுக்கழிப்பறைகளை முறையாக பராமரிக்க வேண்டும். ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் வசதி ஏற்படுத்தி தரவேண்டும். கட்டண கழிப்பறை போன்று பொதுக்கழிப்பறைகளை பராமரித்து சீருடை அணிந்த பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

ஆணையர்:- பொதுக்கழிப்பறைகள் 3 கட்டங்களாக பராமரிப்பு செய்யப்பட இருக்கின்றன. எனவே அனைத்து பொதுக்கழிப்பறைகளும் இனிமேல் நல்ல முறையில் செயல்படும்.

துணைமேயர்:- உங்களின் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

மேயர்:- கோரிக்கைகளை மனுவாக கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்திராணி (தி.மு.க.) :- எனது கோரிக்கைகள் தொடர்பாக ஏற்கனவே மனு கொடுத்து இருக்கிறேன்.

மேற்கண்டவாறு விவாதம் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்