வெயிலின் தாக்கம் குறையாததால் பொதுமக்கள் அவதி

அக்னி நட்சத்திரம் முடிந்த நிலையிலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் குறையாததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.;

Update: 2023-06-01 18:45 GMT

அக்னி நட்சத்திரம் முடிந்த நிலையிலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் குறையாததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

அக்னி நட்சத்திரம்

தமிழகத்தில் கடந்த மே மாதம் 4-ந் தேதி கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய ஒரு வார காலத்தில் வெயில் இல்லாமல் கோடை மழை நன்றாக பெய்தது. ஆனால் அதன் பின்னர் கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாகவே கத்திரி வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. இதனிடையே கடந்த 29-ந் தேதியுடன் அக்னி நட்சத்திரம் முடிந்ததது. இருப்பினும் இன்னும் வெயிலின் தாக்கம் ராமநாதபுரம் மாவட்டத்தில் குறையவில்லை.

குறிப்பாக பகல் நேரங்களில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகின்றது. காலை 8 மணிக்கு வெயிலின் தாக்கம் தொடங்கி விடுகிறது. மாலை 4 மணி வரையிலும் வெயிலின் தாக்கம் அளவுக்கு அதிகமாக உள்ளது.

பொதுமக்கள் அவதி

இதனால் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வரும் போது குடை பிடித்த படியும், தலையில் துணியால் மூடியபடியும்தான் வெளியே வருகின்றனர். மேலும் வாகன ஓட்டிகளும் வெளியில் செல்லும்போது கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மக்கள் சாலையோர கடைகளில் இளநீர், மோர், நுங்கு உள்ளிட்ட பானங்களை அருந்தி வருகின்றனர். பகல் முழுவதும் வெயில் சுட்டெரித்து வருவதால் இரவு நேரங்களில் வீடுகளில் புழுக்கம் அதிகமாக இருந்து வருவதால் குழந்தைகளுடன் வீட்டில் தூங்க முடியாமல் பொதுமக்களும் கடும் அவதி அடைந்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்