வந்தவாசி அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு

வந்தவாசி அடுத்த கொண்டயன்குப்பம் கிராமத்தை தனி வருவாய் கிராமமாக அறிவிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியில் செய்தனர்.;

Update: 2022-06-23 09:41 GMT

வந்தவாசி,

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கொண்டையங்குப்பம் கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கொண்டையங்குப்பம் கிராமம் நல்லூர் கிராமத்தோடு இணைந்து செயல்பட்டு வருகிறது.

கடந்த 15 ஆண்டுகளாக கொண்டையங்குப்பம் கிராமத்தை நல்லூர் கிராமத்தில் இருந்து பிரித்து தனி வருவாய் கிராமமாக அறிவிக்க வேண்டும் என்று பலமுறை மாவட்ட கலெக்டர் மற்றும் வந்தவாசி வட்டாட்சியருக்கு புகார் மனு அளித்தும், பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகின்றது.

இதனால் ஆத்திரமடைந்த 300-க்கும் மேற்பட்ட கொண்டையங்குப்பம் கிராம மக்கள் வந்தவாசி-திண்டிவனம் சாலையில் உள்ள திரேசாபுரம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் வாகனங்கள் வேறு வழியாக பாதைக்கு மாற்றிய போது சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் இரண்டு கிலோமீட்டர் நடந்து சென்று சு.காட்டேரி என்ற கிராமம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் வந்தவாசி-திண்டிவனம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த வந்தவாசி தாசில்தார் முருகானந்தம் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர், சப்-கலெக்டர் வினோத்குமார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு சென்றனர். இதனால் வந்தவாசி-திண்டிவனம் சாலையில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்