சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல்

திருப்பத்தூர் அருகே சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-10-04 17:37 GMT

மோசமான சாலை

திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலை புங்கம்பட்டு ஊராட்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். புதூர்நாடு முதல் கம்பங்குடி வரை சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.

இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. மோசமான சாலையினால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

சாலை மறியல்

இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொத்தனூர் கிராமம் அருகே சென்ற அரசு பஸ்சை சிறைபிடித்து சாலையில் மரக்கிளைகளை போட்டு மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில், திருப்பத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். சாலை மறியலால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்