குப்பை கிடங்கை அகற்றக்கோரி பொதுமக்கள் மறியல்

சத்தியநாதபுரத்தில் உள்ள குப்பை கிடங்கை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2023-06-06 18:08 GMT

குப்பை கிடங்கு

இலுப்பூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் இலுப்பூர் சத்தியநாதபுரத்தில் உள்ள குப்பை கிடங்கில் சேமிக்கப்படுகிறது. இந்த குப்பை கிடங்கில் இருந்து நீண்ட நாட்களாக துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

மேலும் அப்பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் படித்து வரும் மாணவர்களுக்கு உடல் நல சீர்கேடு, சுவாசக்கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகளும் ஏற்படும் என்ற அச்சத்தின் காரணத்தினால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அவர்களது குழந்தைகளை அப்பள்ளியில் சேர்க்க மறுக்கின்றனர். மேலும் இந்த குப்பை கிடங்கில் அடிக்கடி தீவிபத்து ஏற்பட்டு பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் புகை சூழ்ந்து கொள்வதால் பொதுமக்கள் சிரமம் அடைகின்றனர்.

மறியல்

இந்நிலையில், இந்த குப்பை கிடங்கை உடனடியாக அகற்றக்கோரி சத்தியநாதபுரத்தில் வசிக்கும் பொதுமக்கள் இலுப்பூர்-திருச்சி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அன்னவாசல் போலீசார், வருவாய்த்துறை, பேரூராட்சி துறையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் சமாதான கூட்டம் மூலம் பேசி முடிவெடுத்துக்கொள்ளலாம் என உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மறியலை ைகவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் இலுப்பூர்-திருச்சி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்