அடுக்குமாடி குடியிருப்பு மொட்டை மாடியில் நின்று பொதுமக்கள் போராட்டம்

வேலூர் முத்துமண்டபம் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் குடிநீர் வழங்கக்கோரி மொட்டை மாடியில் கருப்புக்கொடியை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-05-16 19:12 GMT

அடுக்குமாடி குடியிருப்புகள்

வேலூர் புதிய பஸ்நிலையம் அருகே முத்துமண்டபம் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இங்கு 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளாக குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படவில்லை என்றும், அதனால் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் அந்த பகுதியில் சலவை தொழிலாளர்கள் துணி துவைக்கும் இடத்தில் இருந்து குடிநீரை பிடித்து பயன்படுத்தி வந்துள்ளனர்.

குடிநீர் வசதி ஏற்படுத்தி தரக்கோரி பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும், ஆர்ப்பாட்டம், போராட்டத்தில் ஈடுபட்டும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. குடிநீர் வசதி இல்லாததால் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகினர். நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் உடனடியாக அதற்கான நடவடிக்கைகள் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.

பொதுமக்கள் போராட்டம்

அதனால் அதிருப்தி அடைந்த அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் பலர் குடிநீர் வழங்கக்கோரி நேற்று காலை 4 மாடி கொண்ட குடியிருப்பின் மொட்டை மாடியில் நின்று போராட்டம் செய்தனர். கையில் கருப்புக்கொடிகளை ஏந்தியபடி கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலர்கள், மாநகராட்சி ஊழியர்கள், வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலர்கள் வேலூர் மாநகராட்சிக்கு ரூ.1 லட்சத்து 48 ஆயிரம் செலுத்தி, விரைவில் குடிநீர் வசதி ஏற்படுத்தி தரப்படும் என்றனர். இதையடுத்து அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்