ராமநாதபுரம் அருகே மாற்றுப்பாதை அமைக்கக்கோரி 2-வது நாளாக பொதுமக்கள் போராட்டம்
ரெயில்வே சுரங்கப்பாதைக்கு பதிலாக மாற்றுப்பாதை அமைக்கக்கோரி பொதுமக்கள் 2-வது நாளாக பேராட்டத்தில் ஈடுபட்டனர். ரெயில் தண்டவாளத்தில் அமர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;
ரெயில்வே சுரங்கப்பாதை
ராமநாதபுரம் அருகே மதுரை தேசிய நெடுஞ்சாலை மற்றும் மதுரை-ராமநாதபுரம் ரெயில்வே பாதையை ஒட்டி உள்ளது லாந்தை கிராமம். இந்த கிராமத்தையொட்டி கண்ணந்தை, பெரிய தாமரைக்குடி, சிறியதாமரைகுடி உள்ளிட்ட 5 கிராமங்கள் உள்ளன.
இப்பகுதி மக்கள் அங்குள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடந்துதான் ராமநாதபுரத்திற்கு வரமுடியும். மாற்றுப்பாதை கிடையாது. இந்நிலையில் ரெயில்வே நிர்வாகம் சார்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிராமங்களுக்கு செல்லும் வழியில் உள்ள ஆளில்லா ரெயில்வே கிராசிங்கை மாற்றி சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது.
அதன் பின்னர் சிறிய அளவில் மழை பெய்தாலும் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி குளம்போல் நின்று வந்தது. இதனால் மேற்கண்ட கிராம மக்கள் அவ்வழியாக செல்ல முடியாமல் கடும் அவதியடைந்து வந்தனர்.
தண்டவாளத்தில் அமர்ந்து
இந்நிலையில் சமீபத்தில் பெய்த மழையால் அந்த ரெயில்வே சுரங்கப்பாதை பகுதி முழுவதும் மழைநீர் தேங்கி மக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்த கிராமங்களுக்கு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து 5 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட போவதாக கூறி கூடாரம் அமைத்து நேற்று முன்தினம் முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
நேற்று காலை ரெயில்வே மண்டல மேலாளர் சரத்ஸ்ரீவத்சவா என்ஜின் மட்டும் உள்ள தனி ரெயிலில் அங்கு வந்தார். அவர் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம், ரெயில்வே நிர்வாகத்திடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். ஆனால் அவர் உறுதி அளிக்காததால் அவர் வந்த என்ஜின் முன் தண்டவாளத்தில் அமர்ந்து சிவப்பு துணியை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கலெக்டர் பேச்சுவார்த்தை
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களில் முக்கிய நபர்களை கலெக்டர் விஷ்ணுசந்திரன் அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்து பேசினார். அப்போது 2 மாத காலத்திற்குள் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதி அளித்தார்.
இதில் சமாதானமடைந்த கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 2 மாத காலத்திற்குள் தீர்வு கிடைக்காவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டத்தை நடத்த உள்ளதாக கிராமத்தினர் தெரிவித்தனர்.