கோவில் இடத்தை மீட்டு தரக்கோரி பொதுமக்கள் மறியல்
கோவில் இடத்தை மீட்டு தரக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.;
குன்னம்:
பட்டாவாக மாற்றம்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள ஜெமின் பேரையூர் கிராமத்தில் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலம் கிராம கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. கோவில் பராமரிப்பு செலவுக்காக, அதே ஊரை சேர்ந்த ஒரு பெண், சுமார் 20 செண்ட் இடத்தை 50 ஆண்டுகளாக பராமரித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த பெண்ணின் மகன், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சுமார் 8 செண்ட் இடத்தை தாயார் பேருக்கு பட்டாவாக மாற்றியதாகவும், அந்த இடத்தில் வீடு கட்ட முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது.
மறியல்
இதையடுத்து கிராம நிர்வாக அலுவலரான அந்த நபர், முறைகேடாக கோவில் இடத்தை பட்டாவாக மாற்றி உள்ளதாக கூறி மாவட்ட கலெக்டர், தாசில்தார் என அனைத்து துறை அலுவலர்களுக்கும், அப்பகுதி மக்கள் மனு கொடுத்துள்ளனர். ஆனால் அவற்றின் மீது எந்த நடவடிக்கையும் இல்லாததால், கோவில் இடத்தை மீட்டு மீண்டும் கோவிலுக்கு வழங்க வேண்டும் என்று கூறி, ஜெமீன் பேரையூர் பஸ் நிறுத்தத்தில் நேற்று பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்த ஆலத்தூர் தாசில்தார் முத்துக்குமார் மற்றும் குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
போக்குவரத்து பாதிப்பு
அப்போது, சம்பந்தப்பட்ட இடம் யார் பெயரில் இருந்தது?. எவ்வாறு அந்த இடம் பட்டாவாக மாறியது என்பதை ஒருவார காலத்திற்குள் தங்களுக்கு தெரியப்படுத்துகிறோம். அதன் பின்னர், இது இட பிரச்சினை என்பதால் யாருடைய இடம் என்பதை கோர்ட்டு மூலம் நீங்கள் தீர்வு காணுங்கள், என்று தாசில்தார் கூறினார். அதற்கு பொதுமக்கள், நாங்கள் ஏன் கோர்ட்டுக்கு செல்ல வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்து, கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.